பெட்டாலிங் ஜெயா, மார்ச் 22 – இந்தியப் பெருங்கடலுக்கு தெற்கே, கடலில் மிதந்த பொருள் ஒன்றை சீன துணைக் கோள் (Gaofen-1) கண்டறிந்துள்ளதாக மலேசியாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது காணாமல் போன MH370 விமானத்தின் பாகமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது.
அந்த பொருள் 22.5 மீ அகலமும், 13 மீட்டர் நீளமும் உடையது என்றும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து இன்று மாலை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுடின் துன் ஹுசைன், “எனக்கு அதன் முழு விபரமும் இன்னும் கிடைக்கவில்லை. சீனா இன்னும் சில மணி நேரங்களில் அந்த தகவலை வெளியிடும் ” என்று தெரிவித்துள்ளார்.
தங்களது துணைக்கோள் கண்டறிந்த தகவலை சீன அரசாங்கம் மலேசியாவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் தெரிவித்திருக்கிறது.
தற்போது கண்டறியப்பட்டிருக்கும் பொருள், ஏற்கனவே ஆஸ்திரேலிய துணைக்கோள் கண்டறிந்த இரு பொருட்கள், மிதந்த பகுதியில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொருள் மிதந்த இடத்திற்கு சீனா தனது மீட்புப் படையை அனுப்பியுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 16 ஆம் தேதி, இந்தியப் பெருங்கடலில் மிதந்த இரண்டு பொருட்களை ஆஸ்திரேலிய துணைக்கோள் படம் பிடித்து அனுப்பியது. அது மாயமான மாஸ் விமானத்தின் இறக்கை அல்லது வால் பகுதியாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.
ஆனால், பலகட்ட தீவிர தேடுதலுக்குப் பிறகும், மீட்புப் படையினரால் கடலில் மிதந்த அந்த பொருளை கண்டறிய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.