கொழும்பு, மார்ச் 23 – ராணுவத்துக்கு தேர்வான பெண்களை, ராணுவ பயிற்சியாளர்கள் சித்ரவதை செய்தது உண்மைதான். இதுகுறித்த காணொளி காட்சி உண்மையானதுதான் என்று முதல் முறையாக இலங்கை ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.
இலங்கையில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ரீலங்காகார்டியன்.ஆர்க்’ என்ற இணையதளத்தில் கடந்த வாரம் 4.41 நிமிடம் ஓடக்கூடிய ஒரு காணொளி காட்சி ஒளிபரப்பானது.
அதில், ராணுவத்துக்கு தேர்வான பெண்களை ராணுவ பயிற்சியாளர்கள் தகாதமுறையில் திட்டுவதும், அடிப்பதும் இடம்பெற்றிருந்தது. ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடக்கவுள்ள நிலையில், வெளியான இந்த காணொளி படக்காட்சி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த காணொளி காட்சி உண்மையானதுதான் என்று இலங்கை ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது. இதுபற்றி இலங்கை ராணுவ செய்திதொடர்பாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரியா கூறியதாவது, காணொளி படக்காட்சி பற்றி இலங்கை ராணுவ காவல்படை விசாரணை நடத்தி வருகிறது.
இதுவரை நடந்த விசாரணையில், அக்காட்சி உண்மையானது என்று தெரிய வந்துள்ளது. அச்சம்பவம், 2012–ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், இலங்கையின் வடக்கு மத்திய மாவட்டமான அனுராதபுரத்தில் நடந்தது. ராணுவ ஒழுக்கத்தை மீறியதற்காக, அந்த பெண் தேர்வர்களுக்கு ராணுவ பயிற்சியாளர்கள் தண்டனை அளித்தனர்.
அதற்காக அவர்கள் கையாண்ட அணுகுமுறை, வழக்கமான நடைமுறையில் இல்லாதது. அவர்களே தங்கள் அதிகாரத்தை மீறி, வரம்புமீறி செயல்பட்டுள்ளனர்.
பூர்வாங்க விசாரணை அறிக்கையில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. என ராணுவ செய்திதொடர்பாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரியா கூறினார்.
பிடிபட்ட விடுதலைப்புலிகளை சுட்டுக்கொன்றதாகவும், பெண் போராளிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இதற்கு முன்பு பல காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஆனால், அவையெல்லாம் தில்லுமுல்லு செய்யப்பட்ட காட்சிகள் என்று இலங்கை ராணுவம் கூறி வந்தது. தற்போது, முதல் முறையாக, ராணுவத்தின் சித்ரவதை பற்றிய காணொளி காட்சியை உண்மை என்று ஒப்புக்கொண்டுள்ளது.