இந்த சம்பவத்தில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த விமானத்தில் திரங்காணு மாநிலத்தைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டாளர்கள், நேற்று இரவு கோலாலம்பூரில் நடைபெற்ற ஆட்டம் முடிந்து தங்களது சொந்த மாநிலத்திற்கு செல்ல அவ்விமானத்தில் பயணம் மேற்கொண்டிருந்தார்கள்.
கால் பந்தாட்டக்காரகளில் ஒருவரான பைஸ் சுப்ரி, விமானத்தின் எரியும் எஞ்சினைப் படம் பிடித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இது குறித்து மலிண்டோ ஏர் நிறுவனம் இன்று வெளியிட்ட அறிக்கையில், “இந்த சம்பவம் விமானம் 7,000 அடி உயரத்தில் பறக்கும் போது நிகழ்ந்துள்ளது. எஞ்சினில் தீ பற்றியவுடன் விமானத்தின் தீ கண்டறியும் கருவிகள் இயக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து விமானப் பணியாளர்கள் அவசரகால நடவடிக்கைகளை மேற்கொண்டு நிலைமையை கட்டுப் படுத்தியுள்ளனர். அதே வேளையில், விமானி உடனடியாக சுபாங் விமான நிலையத்திற்கு விமானத்தை திருப்பி, பத்திரமாக தரையிறக்கினார். இதில் பயணிகள் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்கள் அனைவரும் வேறு ஒரு விமானத்தில் திரங்காணுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், எஞ்சின், விமானத் தயாரிப்பு நிறுவனத்திற்கும் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் மலிண்டோ நிறுவனம் அறிவித்துள்ளது.
மலேசியாவைச் சேர்ந்த மலிண்டோ ஏர் நிறுவனம் கடந்த வருடம், மார்ச் 23 ஆம் தேதி, தனது புதிய B737-900ER விமானம் மூலம் சேவையைத் துவங்கியது குறிப்பிடத்தக்கது.