வாஷிங்டன், மார்ச் 27 – உலக நாடுகள் விமானப் போக்குவரத்தின் பாதுகாப்புக் காரணிகளை ஆராய வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில், அதிவேகமான சொகுசு விமானங்களைத் தயாரிக்கும் போயிங் நிறுவனத்தின் ‘போயிங் 747-8’ விமானங்களில் மென்பொருள் குறைபாடு உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் கூட்டுறவு விமானப் போக்குவரத்து இலாகா (U.S. Federal Aviation Administration – FAA) வெளியிட்டுள்ள அறிக்கையில், “போயிங் 747-8 விமானத்தின், பயன்பாட்டில் உள்ள மென்பொருளினால், தரையிறக்கத்தின் போது உந்து திறன் குறைந்து, விபத்துகள் ஏற்படும் சூழல் உள்ளது. இந்த குறைபாடுகளைக் களைய அந்நிறுவனத்திடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.
இதற்கு தனது இணையதளத்தில் பதிலளித்துள்ள போயிங் நிறுவனம், பல்வேறு நாடுகளுக்கு 66 நான்கு என்ஜின் ஜெட் (4 Engine Jet ) விமானங்களை கொடுத்துள்ளதாகவும், வாடிக்கையாளர்கள் இதுவரை இதுபோன்ற குறைபாடுகளைத் தெரிவித்ததில்லை என்று கூறியுள்ளது.
மேலும் கடந்த ஆண்டு தரவு பகுப்பாய்வின் போது, விமான மென்பொருளில் முக்கிய குறைபாடு இருந்ததாகவும், அது உடனடியாக சரி செய்யப்பட்டு, அனைத்து விமானங்களிலும் மேம்படுத்தப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளது.
மலேசிய போயிங் ரக விமானம் MH370 , கடலில் விழுந்ததற்கு அதில் மென்பொருள் குறைபாடும் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவித்து வருவதால், எப்எஎ தனது பிடியை இறுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.