Home கலை உலகம் திரைவிமர்சனம்: “நெடுஞ்சாலை” – எதார்த்தமான பயணம்!

திரைவிமர்சனம்: “நெடுஞ்சாலை” – எதார்த்தமான பயணம்!

2482
0
SHARE
Ad

Neduமார்ச் 28 – நள்ளிரவில் நெடுஞ்சாலையில் பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்லும் லாரிகள் எல்லாம் அந்த ஊரில் தார்பாய் முருகன் என்பவனின் அட்டகாசம் தாங்காமல் வேறு பாதையில் செல்கின்றன.

காரணம் லாரி போய் கொண்டு இருக்கும் போதே, சத்தமின்றி அதன் பின்னால் ஏறி அதிலிருந்து சரக்குகளையெல்லாம் திருடிவிடும் ஆற்றல் கொண்டவன்.

ஒரு சிறிய வாகனத்தில் தன் சகாக்களுடன் சேர்ந்து லாரிகளில் கொள்ளையடித்து, அதை தனது முதலாளியிடம் கொடுத்து விடுவதைத் தவிர தார்பாய் முருகனுக்கு, காசு பணம் மீது அந்தளவிற்கு ஈடுபாடு இல்லை.

#TamilSchoolmychoice

இப்படியாக கரடு முரடாகப் போய் கொண்டு இருந்த முருகனின் வாழ்க்கையில் ஒரு மோசமான காவல்துறை அதிகாரியும், ஒரு பெண்ணும் நுழைகிறார்கள்.

இவர்கள் மூன்று பேருக்குள் என்ன மாதிரியான பிரச்சனைகள் உருவாகின்றன. இறுதியில் தார்பாய் முருகனுக்கு என்ன நேர்ந்தது என்பதை எதார்த்தமான திரைக்கதையுடன் சொல்கிறது இன்று புதிதாக வெளிவந்திருக்கும் “நெடுஞ்சாலை” திரைப்படம்.

சூர்யா, ஜோதிகா நடிப்பில் “சில்லுனு ஒரு காதல்” படத்தை இயக்கிய கிருஷ்ணா தான் “நெடுஞ்சாலை” படத்தின் இயக்குநர். உதயநிதி ஸ்டாலின் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

தார்பாய் முருகனாக ஆரியும், கதாநாயகியாக ஷிவதாவும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் தம்பி ராமையா, மலையாள நடிகர் சலீம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்திற்கு சத்யா என்பவர் இசையமைத்துள்ளார். பின்னணி இசையும், பாடல்களும் ரசிக்க வைக்கின்றன. 1980 களில் நடந்த கதை என்பதால் அந்த காட்சிகளைக் கொண்டு வர ஒளிப்பதிவாளர் ராஜீவன் மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். குறிப்பாக அதிகாலை, நள்ளிரவு காட்சிகள் நெடுஞ்சாலையின் குளிரை நம்முள் கொண்டு வந்து வீசுகின்றன. கிஷோரின் படத்தொகுப்பு கதையின் வேகத்தை அதிகரித்திருக்கிறது.

திரைக்கதைNedunjalai (1)

“நெடுஞ்சாலை” என்ற பெயருக்கேற்றார் போல் இப்படத்தின் கதையும் ஒரு பயணத்தில் தொடங்குகின்றது. தார்பாய் முருகன் கூட்டாளிகளில் ஒருவர் கதையை சொல்லத் தொடங்குகின்றார்.

நிகழ்காலத்தில் தொடங்கும் கதை, பிளாஷ்பேக்கில் 1980 களுக்கு செல்கின்றது. அந்த காலத்து கிராமம், அதன் வழியே செல்லும் நெடுஞ்சாலை, வட்டார மொழி, வானொலி திரைப்பாடல்கள் என ஒவ்வொன்றும் மிக கவனமாக கையாளப்பட்டிருக்கின்றன.

பிளாஷ்பேக் காட்சிகள் பார்வையாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தாத வகையில் சொல்லப்பட்டிருப்பது இயக்குநரின் திறமையை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கின்றது.

படத்தின் இறுதியில் நல்லா வாழ்பவருக்கு ஒரு உதாரணமும், தீய வழிகளில் சென்று அழிந்து போனவருக்கு ஒரு உதாரணமும் சொல்லிய விதம் அருமை.

Nedunjalai (3)கதாப்பாத்திரங்கள்

ரெட்டை சுழி படத்தில் நடித்த ஆரி என்ற நடிகரா இவர் என்று கேட்கும் அளவிற்கு, உடற்கட்டு முதல் தலைமுடி, தாடி வரை கரடு முரடான தோற்றத்துடன் தார்பாய் முருகனாக வாழ்ந்திருக்கிறார்.

லாரியை துரத்திக்கொண்டு ஓடுவது, தன்னைத் தேடி வரும் கதாநாயகியை கோபம் கொண்டு விரட்டுவது. காதல் வந்த பின்னர் காதலியிடம் அன்பாகப் பேசுவது என ஒரு அச்சு அசல் முரட்டுத்தனம் நிறைந்த கிராமத்துவாசியாக நடித்திருக்கிறார். அவர் பேசும் வசன உச்சரிப்புகள் அற்புதம்.

கதாநாயகி ஷிவதா, நெடுஞ்சாலையில் சாப்பாட்டுக் கடை வைத்திருக்கும் மலையாள பெண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறார். மலையாளப் பெண்களிடம் இருக்கும் அதே அப்பாவித் தனம், குறும்பு ஆகிய உணர்வுகளை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் கோபப்படும் இடங்களில் மட்டும் நடிப்பில் ஏனோ லேசான செயற்கைத்தனம் எட்டிப்பார்க்கிறது. பாவாடை சட்டையில் மிக அழகாகத் தெரிகிறார்.Nedunjalai (4)

வில்லனாக வரும் காவல்துறை அதிகாரி பிரசாந்த் நாராயணன், மிரட்டியிருக்கிறார். அவர் பேசும் கொச்சைத் தமிழும், அவரது வித்தியாசமான நடிப்பும் தமிழகத்தின் கேரளா, கர்நாடகா எல்லையோர கிராமங்களை நினைவு படுத்துகின்றது. நாயகி ஷிவதாவை அவர் வச்ச கண் வாங்காமல் உற்றுப் பார்க்கும் காட்சிகளில் நமக்குள் ஏனோ ஒருவித பதைபதைப்பு ஏற்படுத்துவதைத் தடுக்க முடியவில்லை.

சாப்பாட்டுக் கடை மாஸ்டராக தம்பி இராமையா, அவருக்கு உதவியாக வரும் சிறுவன், நாட்டுசேகர் வேடத்தில் வரும் மலையாள நடிகர் சலீம் அவருக்கு உதவியாக வரும் நடிகர் (கும்கி படத்தில் தம்பி இராமையாவிற்கு உதவியாளராக வருபவர்) ஆகியோர் கூட்டணியில் படத்தில் கலகலப்பிற்கு பஞ்சமில்லை.

சருக்கல்கள்

சில இடங்களில் கதாப்பாத்திரங்களின் வசன உச்சரிப்பு சரியாக விளங்கவில்லை. பார்வையாளர்களை மிரட்ட வேண்டும் என்பதற்காகவே அடித் தொண்டையில் பேச வைத்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

ஆரியும், காவல்துறை அதிகாரியும் அடிக்கடி மோதிக்கொள்ளும் இடங்கள் அலுப்பை ஏற்படுத்துகின்றன. காட்சிகளில் அவ்வளவு அழுத்தம் இல்லை.

மற்றபடி, விறுவிறுவென நகரும் திரைக்கதை, ஆங்காங்கே திருப்பங்கள், இதுவரை சொல்லப்படாத கதைக்களம் என “நெடுஞ்சாலை” – ஒரு எதாரத்தமான பயணமாக அமைகின்றது.

– செல்லியல் விமர்சனக் குழு

நெடுஞ்சாலை திரைப்படத்தின் முன்னோட்டம்: