இலங்கை, மார்ச் 29 – எல்லையை தாண்டி மீன் பிடிக்கின்றனர் என்று கூறி தமிழக மீனவர்களை, கடற்படையைக் கொண்டு தாக்குவதையும், கைது செய்வதையும் வாடிக்கையாகக் கொண்ருந்தது இலங்கை அரசு. இந்நிலையில் நேற்று, தங்கள் நாட்டு சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யும்படி அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்தில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில், தமிழ் மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்கும் பொருட்டு, இருநாட்டு மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தை நடந்தது. இதைத் தொடர்ந்து கொழும்பில் கடந்த 25-ஆம் தேதி, 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது.
ஆனால் மீண்டும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைக்க, இருதரப்பு பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது.இந்நிலையில் திடீரென அந்நாட்டு அதிபர் ராஜபக்சே,
அனைத்து தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளதாக வந்த தகவல்களால், தமிழக கடலோர கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இலங்கை சிறையில் மொத்தம் 98 தமிழக மீனவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.