துருக்கி, மார்ச் 31 – துருக்கி பிரதமர் ரெசிப் தயிப் எர்டோகனின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய உள்ளாட்சித் தேர்தலில் அவரது நீதி மற்றும் முன்னேற்ற கட்சி (AKP )( 44%-46%) அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி அடைந்துள்ளனர்.
துருக்கியில் பத்தாண்டு காலமாக ஆட்சி புரிந்து வரும் பிரதமருக்கு எதிராக கடந்த ஒராண்டாகவே ஏராளமான போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. எர்டோகனின் வாரிசுகள் மற்றும் அமைச்சர்கள் மாபெரும் ஊழல்களைச் செய்துள்ளதாக ‘ட்விட்டர்’ (Twitter) மற்றும் யூ-ட்யூப் (You Tube) போன்றவற்றில் தெரிவிக்கப்பட்டுவந்தது.
ஆரம்பம் முதலே இதனை மறுத்து வந்த எர்டோகன் ‘ட்விட்டர்’ மற்றும் யூ-ட்யூபிற்கு தடை விதித்திருந்தார். இந்நிலையில் தேர்தலை எதிர்கொண்ட பிரதமரின் நீதி மற்றும் முன்னேற்ற கட்சி (AKP ) பெருவாரியான இடங்களில் வெற்றியை தக்கவைத்துக்கொண்டது.
இந்த வெற்றி குறித்து துருக்கி பிரதமர் ரெசிப் தயிப் எர்டோகன் கூறியதாவது, “இந்த நாள் வெற்றிக்கான நாள், நாம் புதிய துருக்கியை உருவாகும் நேரம் வந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.
எதிர்மறையான விமர்சனங்கள் பற்றி தனக்கு கவலையில்லை என்றும், தனது கட்சி 41% அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெரும் என்று எர்டோகன் முன்னதாகவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.