மும்பாய், ஏப்ரல் 3 – இந்தியாவின் முதல் மோனோ ரயில் திட்டம் மும்பாயில் தற்போது இயங்கி வருகின்றது. மலேசியாவின் ஸ்கோமி (SCOMI) நிறுவனம்தான் இந்தியாவில் தனது முதல் திட்டமாக இதனை நிறைவேற்றியுள்ளது.
சென்னையிலும் மற்ற இந்திய நகரங்களிலும் இதே போன்று மோனோ ரயில் திட்டங்களை நிர்மாணிக்கும் முயற்சிகளிலும் ஸ்கோமி ஈடுபட்டு வருகின்றது.
இதற்கிடையில், மும்பாய் மோனோ ரயில் இயக்கத்திற்கு நாள் ஒன்றுக்கு ரூ.7 லட்சம் செலவாகின்றது என்றும், ரூ.2 லட்சம் மட்டுமே வருமானமாகக் கிடைக்கின்றது என்றும் இதனால் மாதத்திற்கு ரூ.1½ கோடி நஷ்டத்தில் மும்பையில் மோனோ ரெயில் இயக்கப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவலை தமிழகத்தின் தினத்தந்தி பத்திரிக்கை செய்தியாக வெளியிட்டுள்ளது.
மோனோ ரெயில்
கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவின் முதல் மோனோ ரயில் சேவை மும்பையில் தொடங்கியது. ஆரம்ப நாட்களில் மோனோ ரயில் நிலையத்தில் மக்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்துக் கிடந்து டிக்கெட் வாங்கி மோனோ ரயிலில் பயணம் செய்தனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல மோனோ ரயில் மீதான மோகம் குறைந்து மக்கள் கூட்டம் படிப்படியாக குறையத் தொடங்கியது என்றும் அந்த செய்தி தெரிவிக்கிறது.
இதனால் மோனோ ரயில் கட்டண சீட்டுகள் விற்பனை மூலம் மிகக் குறைந்த வருவாயைத்தான் மும்பை பெருநகர வளர்ச்சி குழுமம் பெற்று வருகின்றது.
நாள் ஒன்றுக்கு சுமார்ரூ.5 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
ரூ 1½ கோடி நஷ்டம்
இது குறித்து மும்பை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரி ஒருவர் கூறியதாக பின்வரும் கருத்துக்களையும் தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
“ஒரு நாளைக்கு மோனோ ரெயிலை இயக்குவதற்கு ரூ.7 லட்சம் வரை செலவாகிறது.ஆனால் ரூ.1½ லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை மட்டுமே வருவாய் கிடைக்கிறது. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.5 லட்சம் வரை நஷ்டம் ஏற்படுகிறது. மாதத்திற்கு சுமார் ரூ.1 கோடி முதல் ரூ.1½ கோடி வரை அரசுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. ஒருமாதத்திற்கு மோனோ ரெயில் பாதுகாப்பிற்காக மட்டும் ரூ.1 கோடி செலவாகிறது.பாதுகாப்பு பணிக்காக அனைத்து மோனோ ரெயில் நிலையங்களிலும் 500 போலீசார்பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.மோனோ ரெயிலை ஒரு முறை வடாலாவில் இருந்துசெம்பூர் வரை இயக்க ரூ.3 ஆயிரத்து 500 செலவாகிறது. தற்போது தினமும் 64 முறைமோனோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.”
தேர்தல் காரணம்
“முதலில் மும்பை பெருநகர வளர்ச்சி கழகம் மோனோ ரெயில் டிக்கெட் கட்டணத்தை ரூ.9–லிருந்து ரூ.20 வரை வசூலிக்கவே அரசிடம் அனுமதி கோரியது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அரசு குறைந்த கட்டணமாக ரூ.5 வசூல் செய்ய அரசாங்கம் உத்தரவிட்டது. இதுதான் மிகப்பெரிய அளவிலான நஷ்டத்திற்கு முக்கிய காரணமாகும். உலகில் போக்குவரத்து திட்டங்கள் அனைத்தும் லாபத்தில் இயங்குகிறது என்று கூற முடியாது. ஆனால் மும்பையில் இயக்கப்படும் மோனோ ரெயில்கள் மிகப் பெரிய நஷ்டத்தில் இயக்கப்படுகிறது”
இவ்வாறு அந்த அதிகாரி கூறியுள்ளார்.