மிர்பூர், ஏப்ரல் 7 – மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட 20/20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நேற்று இந்தியா இலங்கையிடம் தோல்வி கண்டது. வழக்கம்போல் வீராட் கோலி அதிகமான ஓட்டங்கள் எடுத்து இந்தியாவை முன்னணிக்கு கொண்டு சென்றாலும், இடையில் வந்த யுவராஜ் சிங்கின் சொதப்பலான ஆட்டத்தினால் அதிக ஓட்டங்கள் எடுக்க முடியாமல் இந்தியா தடுமாறியதே தோல்விக்குக் காரணமாகும்.
இதனால் ஆத்திரமடைந்த இரசிகர்கள், சண்டிகார் நகரில் உள்ள யுவராஜ் சிங்கின் வீட்டை நோக்கி கற்களை வீசினர்.
முதலில் பந்து வீசிய இலங்கை அணியின் திறமையான பந்து வீச்சால் இந்தியா 130 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. மொத்தம் 77 ஓட்டங்கள் எடுத்த வீராட் கோலி இறுதிப் பந்து வரை நிலைத்து நின்று ஆடினார்.
ஆனால், யுவராஜ் சிங்கோ, 21 பந்துகளில் 11 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். இதனால்தான் இந்திய அணிக்குப் பின்னடைவு ஏற்பட்டது.
பின்னர் இரண்டாவது கட்ட ஆட்டத்தில், இலங்கை 4 விக்கெட்டுகளை இழந்தாலும், அதன் விளையாட்டாளர்கள் சிறப்பாக பந்துகளை அடித்து 17.5வது ஓவரில் 132 ஓட்டங்களை எடுத்து உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
இலங்கையின் சங்ககாரா மிகச் சிறப்பாக விளையாடி 50 ஓட்டங்களுக்கும் மேல் எடுத்தார். இந்த வெற்றியுடன் அவர் கிரிக்கெட் ஆட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணிக்குத் தலைமை தாங்கிய லாசித் மலிங்காவும் தனது குழுவை சிறப்பாக வழி நடத்தினார்.
20/20 உலகக் கிண்ணத்தை இலங்கை கைப்பற்றுவது இதுவே முதல் முறையாகும்.