ஐரோப்பா, ஏப்ரல் 8 – லாட்வியா மற்றும் லித்துவேனியா குடியரசுகளில் ரஷ்யாவின் தொலைகாட்சிச் சேனல்களுக்குத் தடை வடக்கு ஐரோப்பாவின் பால்டிக் பிராந்தியத்தில் உள்ள லாட்வியா மற்றும் லித்துவேனியா குடியரசுகள் தங்கள் நாடுகளில், ரஷ்யாவின் தொலைகாட்சிச் சேனல்களை ஒளிபரப்ப தடை விதித்துள்ளன.
உக்ரைன் போன்று தங்கள் நாடுகளில் வசிக்கும் ரஷ்ய ஆதரவாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு விடக் கூடாது என்ற காரணத்திற்காக இத்தகைய முன் எச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளன.
லாட்வியாவின் செய்தித் தொடர்பாளர் சானிட ப்ளோம்நைஸ் இது குறித்து கூறுகையில்,ரஷ்யாவின் RTR Rossia ஒளிபரப்புச் சேவை வரும் 8-ஆம் தேதி (நாளை) முதல் மூன்று மாதங்களுக்கு தடை செய்யப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இதே போன்று லித்துவேனியாவில் செயல்படும் RTR Planeta ஒளிபரப்புச் சேவையும் நிறுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்த இரு சேனல்களையும் ரஷ்யாவின் VGTRK நிறுவனம் ஒளிபரப்பிவந்தது. வெளிநாடுகளில் வாழும் ரஷ்ய ஆதரவாளர்களை ரஷ்யா பாதுகாக்கும் என்ற புடினின் அறிவிப்பாலும், கிரிமியாவைத் தொடர்ந்து உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சியினாலும், ரஷ்யர்களை சிறுபான்மையினராக கொண்டுள்ள சிறுசிறு குடியரசுகள் கலக்கம் அடைந்துதுள்ளன.