கோலாலம்பூர், ஏப்ரல் 8 – லஹாட் டத்து ஊடுருவல் தொடர்பில், டிவி3 மற்றும் உத்துசான் மலாயு பெர்காட் நிறுவனத்திற்கு எதிராக எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், தொடுத்த 100 மில்லியன் அவதூறு வழக்கில் வழக்கறிஞராக என்.சுரேந்திரன் பிரதிநிதிக்க நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
இன்று காலை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், சுரேந்திரன் இந்த வழக்கில் பிரதிநிக்க முடியாது என்றும், பிகேஆர் கட்சியின் தலைவராக அன்வாரும், உதவித் தலைவராக சுரேந்திரனும் இருப்பதால் அன்வார் சார்பாக அவர் பிரதிநிதிக்க முடியாது என்று நீதிபதி ரோஸிலா யோப் தெரிவித்துள்ளார்.
எனினும், தான் இந்த வழக்கில் பிரதிநிதிக்க மேல் முறையீடு செய்யப்போவதாக சுரேந்திரன் அறிவித்துள்ளார்.
வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த வழக்கில் அன்வாருக்கு உதவியாக வழக்கறிஞர் அம்பிகா ஸ்ரீனிவாசன் செயல்படுவார் என்று கூறப்படுகின்றது.
கடந்த வருடம் சபா மாநிலம் லஹாட் டத்துவில் சுலு படையினர் ஊடுருவியதன் தொடர்பில், அன்வார் உட்பட எதிர்கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடரப்பட்டது.
அன்வார் உத்துசான் குழுமத்தின் தலைமை ஆசிரியர் அப்துல் அஸீஸ் இஷாக், டிவி 3 குழுமத்தின் ஆசிரியர் ஷாருடின் அப்துல் லதீப் மற்றும் புல்லெட்டின் உத்தாமா ஆசிரியர் இங் பூன் செங் ஆகியோர் மீது அவதூறு வழக்குத் தொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.