சென்னை, ஏப்ரல் 8 – சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்து சிவகார்த்திகேயன், கதாநாயகனாக நடித்த மெரீனா படம் தொடங்கி மான் கராத்தே வரை வெற்றி தொடர்கிறது.
மெரீனா, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் ஆகிய படங்களில் அவர் கதாநாயகனாக நடித்திருந்தாலும், இந்தப் படங்கள் அனைத்தையும்விட சிவகார்த்திகேயனுக்கு சூப்பர்ஹிட் படமாக அமைந்தது, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம்தான்.
இந்தப்படம் சுமார் 25 கோடி வசூலித்தது. தயாரிப்பாளருக்கு மட்டுமே 8 கோடி நிகர லாபத்தைக் கொடுத்தது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் மான் கராத்தே.
இந்தப் படத்துக்கு விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நாயகர்களின் படங்களுக்கு நிகரான ஓப்பனிங் இருந்தது. மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மான் கராத்தே படம், எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று சில ரசிகர்கள் அபிப்ராயப்பட்டாலும், திரையரங்குகளில் கூட்டம் இன்னமும் குறையவில்லை.
வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்களில், தமிழ்நாட்டில் மட்டும் மான் கராத்தே படம் 12 கோடி வசூலித்திருக்கிறது என்கிறது விநியோகஸ்தர்கள் தரப்பு. சிவகார்த்திகேயனின் முந்தைய படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வசூலைவிட இந்தத் தொகை பல மடங்கு அதிகமாம்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுக்க பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது மான் கராத்தே. அசுர வேகத்தில் வளர்ந்துவிட்ட சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மட்டுமல்ல, அவரது படங்களின் வசூலும் முன்னணி நாயகர்களை அதிர்ச்சியடை வைத்திருக்கிறதாம்.