ஹாங்காங், ஏப்ரல் 9 – 1997ஆம் ஆண்டு முதல் சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாக பகுதியாக, ஹாங்காங் இருந்து வருகிறது. சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கெண்டுள்ள ஹாங்காங் ஒரு நாடு இரண்டு முறைமை எனும் கொள்கையின் அடிப்படையில் இயங்கிவருகிறது.
இந்நிலையில் ஹாங்காங்கில் வரும் 2017ம் ஆண்டு நடைபெற உள்ள, பொதுத் தேர்தலில் சீனா தனது ஆதிக்கத்தை செலுத்த நினைக்கின்றது. அதனால் தங்கள் ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி பெற பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
சீனாவின் இந்த நடவடிக்கைகளுக்கு அதிருப்தி தெரிவித்துள்ள ஹாங்காங்கின் எதிர்கட்சித் தலைவர்களான ஆன்சன் சான் மற்றும் மார்டின் லீ ஆகியோர், சீனாவின் ஆதிக்கப்போக்கை தடுக்கும் வண்ணம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த வெள்ளிகிழமை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோசப் பிடனை சந்தித்து பேசிய அவர்கள், ஹாங்காங்கில் ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த அமெரிக்கா துணை நிற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, ஹாங்காங்கின் விவகாரங்களில் தலையிடுவது, சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்குச் சமம் என்றும், அப்படி அமெரிக்கா தலையிட்டால் இருநாடுகளின் உறவிலும் பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளது.