குஜராத், ஏப்ரல் 9 – குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி சற்றுமுன் வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்காக வதோதரா வந்த அவருக்கு பாரதிய ஜனதா கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் விமான நிலையத்திலிருந்து மாவட்ட தேர்தல் அலுவலகம் வரை திறந்தவெளி ஜீப்பில் நரேந்திரமோடி ஊர்வலமாக சென்றார். அங்கு, தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான வினோத் ராவிடம் நரேந்திரமோடி தனது வேட்புமனுவை அளித்தார்.
டீக்கடை வைத்திருக்கும் கிரண் மகிதா என்பவர் உட்பட 5 பேர், வேட்புமனுத் தாக்கலின்போது மோடியின் பெயரை முன்மொழிந்தனர். நரேந்திரமோடி வருகையையொட்டி, வதோதரா நகரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
வரும் 30-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள வதோதரா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மதுசூதன் மிஸ்த்ரியும் ஆம் ஆத்மி சார்பில் சுனில் திகம்பர் குல்கர்னியும் போட்டியிடுகின்றனர். வதோதரா தவிர உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியிலும் மோடி களமிறங்குகிறார். இங்கு மே 12-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.