கோலாலம்பூர், ஏப்ரல் 11 – நாடாளுமன்றத்தில் நேற்று கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்மின் அலியும், சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் மைடினும் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் அனைவரும் அவையிலிருந்து வெளி நடப்பு செய்தனர்.
அன்வாருக்கு எதிரான 2ஆவது ஓரினப் புணர்ச்சி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகளை கண்டித்து அஸ்மின் சமர்ப்பித்த தீர்மானம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சபாநாயகருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதை தொடர்ந்து அவையில் இருந்து வெளியேற்றப்பட்டார். அந்தத் தீர்மானத்தை சபாநாயகர் புறக்கணிப்பதாகக் கூறி அஸ்மின் வாதிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஸ்மின் அலி அரசாங்கத்தால் கொண்டு வரப்படும் தீர்மானங்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென சட்டத்தில் குறிப்பிட்டிருப்பதாக சபாநாயகர் தெரிவித்தார் என்று கூறினார்.
நாங்கள் 64 நாடாளுமன்றஉறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற்று இருக்கிறோம். இது நான்கில் ஒரு பகுதியை விட கூடுதலாகும். இவை அனைத்தும் இருந்தும் அவர் என்னை எளிதாக வெளியேற்றிவிட்டார்.
நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் இல்லை என நான் எண்ணும்படி அவருடைய இந்த செயல் அமைந்து விட்டது என்றும் மேலும் கூறினார்.