Home India Elections 2014 செல்லியல் தேர்தல் பார்வை # 1 : நரேந்திர மோடி-ரஜினி சந்திப்பு தமிழ் நாட்டில் மாற்றத்தை...

செல்லியல் தேர்தல் பார்வை # 1 : நரேந்திர மோடி-ரஜினி சந்திப்பு தமிழ் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

693
0
SHARE
Ad

modi-moss-2-650_041314100405சென்னை, ஏப்ரல் 14 – நேற்று  தனது தேர்தல் சூறாவளி சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக சென்னை வந்த பாஜகவின் பிரதமர் வேட்பாளர் சென்னையில் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மோடியுடனான சந்திப்பிற்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்புதான். நான் நோய்வாய்ப்பட்டிருந்தபோது என்னைச் சந்தித்த நரேந்திர மோடி நான் நலமடைவதற்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த முறை அவர் என்னைச் சந்தித்தபோது அவர் தேர்தலில் வெல்வதற்கு நான் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டேன்” என தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த நரேந்திர மோடி நானும் உங்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று கூறியுள்ளார்.

அதன் பிறகு இருவரும் கட்டியணைத்து தங்களின் அன்பைப் புலப்படுத்திக் கொண்டுள்ளனர். அதன்பிறகு நரேந்திர மோடி ரஜினியுடனான தனது குறுகிய சந்திப்பை முடித்துக் கொண்டு கிளம்பி விட்டார்.

மோடி அலை தமிழ் நாட்டுக் கரையிலும் பாயுமா?

இந்தியாவின் வட மாநிலங்களில் பரவுகின்ற மோடி அலையும், பாஜகவிற்கு சாதகமான ஆதரவு அலையும் ஏனோ தமிழகத்தில் இதுவரை பரவவில்லை என்றுதான் கூற வேண்டும்.

இந்நிலையில், திமுகவையும் அதிமுகவையும் ஒதுக்கி வைத்து விட்டு (அல்லது அவர்கள் பாஜகவை ஒதுக்கி வைத்து விட்டார்கள் என்றும் கொள்ளலாம்) தேர்தலைச் சந்திக்க பாஜக தயாராகி விட்டது.

பாஜகவிற்கு தமிழ் நாட்டில் பக்கபலமாக நிற்பவர்கள் விஜயகாந்தும், வைகோவும், பாமக கட்சியின் டாக்டர் ராமதாசும்தான். ஆனால், நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்ற எண்ண ஓட்டமும் பல தமிழக வாக்காளர்களிடையே பரவிக் கிடக்கின்றது என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.

இந்த நரேந்திர மோடிக்கு ஆதரவான அலையோடு சேர்ந்து விஜயகாந்த், வைகோ, பாமக சார்பு வாக்குகளான வன்னியர் வாக்குகளும் ஒன்று சேர்ந்தால், கணிசமான சில தொகுதிகளை பாஜக கூட்டணி தமிழ் நாட்டில் கைப்பற்ற முடியும் என்பது ஒரு சில விமர்சகர்களின் அரசியல் கணிப்பாகும்.

ரஜினியைக் குறிவைத்து பாஜகவின் தேர்தல் வியூகம்

இந்நிலையில் தனிமனிதராக தமிழ் நாட்டு மக்களை தனது நடிப்பாலும், எளிமையாலும் கவர்ந்திழுத்து தனது கைப்பிடிக்குள் வைத்திருக்கும் ரஜினிகாந்தை குறிவைத்து பாஜக தனது தேர்தல் வியூகத்தை நகர்த்தியிருக்கின்றது.

நேற்று பிரச்சாரத்திற்காக சென்னை வந்த நரேந்திர மோடி ரஜினிகாந்தை சந்தித்திருப்பதன் மூலம், புதிய பரபரப்பையும் தனது பிரச்சார உத்திகளின் மூலம் தமிழ் நாட்டில் பாஜக கூட்டணிக்கு புதிய எழுச்சி அலையையும் உருவாக்கித் தந்திருக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து தமிழ் நாட்டுக்கு பாஜக தலைவர்கள் அத்வானியும், ராஜ் நாத் சிங்கும் பிரச்சாரத்திற்காக வருகை தரப் போகின்றார்கள் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

ரஜினி மீது மீண்டும் அரசியல் வெளிச்சம்

கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் இருந்து ஒதுங்கியும், ஒளிந்தும் இருந்த ரஜினி இப்போது இந்த பொதுத் தேர்தலின் மூலம்  மீண்டும் அரசியல் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றார்.

பாஜகவிற்கு நேரடியாக ஆதரவு தெரிவிக்காவிட்டாலும், நரேந்திர மோடியைச் சந்தித்ததன் மூலம் பாஜகவிற்கான தனது ஆதரவை – அடுத்த பிரதமராக மோடிதான் வரவேண்டும் என்ற தனது ஆவலை மறைமுகமாக ரஜினி வெளிப்படுத்தியிருக்கின்றார்.

சுலபமாக, ரஜினி இந்த சந்திப்பைத் தவிர்த்திருக்கலாம். அதன்மூலம் தன்னைச் சுற்றி இனி எழப்போகும் அரசியல் சுழல்களையும், சர்ச்சைகளையும் அவர் ஒதுக்கியிருக்கலாம்.

ஆனால் அப்படிச் செய்யாமல் நேரடியாக மோடிக்கு முக்கியத்துவம் கொடுத்து சந்தித்திருப்பதன் மூலம் தனது தனிப்பட்ட விருப்பத்தையும் மக்களுக்கு மறைமுகமாக எடுத்துக் கூறியிருக்கின்றார் ரஜினி.

ரஜினியின் சிக்கல்

மோடி சந்திப்பைத் தவிர்ப்பதில் ரஜினிக்கு ஒரு சிக்கலும் இருந்திருக்கின்றது.

ரஜினி நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது பிரபல நடிகரும் அரசியல் விமர்சகருமான சோவுடன் ரஜினியை மருத்துவமனையில் வந்து நரேந்திரமோடி சந்தித்துள்ளார்.

அதற்கு நன்றிக் கடனாக, பிரதி உபகாரமாக, பொதுத் தேர்தல் காலத்தில் தன்னை வந்து சந்திக்க நரேந்திர மோடி விரும்பியபோது மறுப்பு சொல்ல ரஜினிகாந்தின் மனம் இடம் கொடுக்கவில்லை.

அதன் விளைவுதான் நேற்று நடந்த நரேந்திர மோடி – ரஜினிகாந்த் சந்திப்பு!

இதன் அரசியல் தாக்கங்கள் எதுவரை தமிழ் நாட்டிலும், தமிழ் நாட்டுக்கு வெளியேயும் பாயும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

-இரா.முத்தரசன்