கரூர், ஏப்ரல் 14 – நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் இதுவரை பாரதிய ஜனதாவை விமர்சிப்பதை தவிர்த்து வந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று முதல்முறையாக அந்த கட்சியை கடுமையாக விமர்சித்தார்.
கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, காவிரி நதிநீர் பிரச்சனையில் தொடர்ந்து துரோகம் செய்யும் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள்.
நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பாரதிய ஜனதா கட்சியை முதல்வர் ஜெயலலிதா முதல் முறையாக மிகக் கடுமையாக தாக்கிப் பேசியிருக்கிறார்.
தமிழகத்தில் காங்கிரஸ், பாஜகவுக்கு டெபாசிட் கூட கிடைக்கக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கும், பாரதிய ஜனதாவுக்கும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் எந்த காலத்திலும் காங்கிரஸ் அல்லது பாரதிய ஜனதா கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியாது. கர்நாடகாவில் உள்ள காங்கிரசும், பாரதிய ஜனதாவும் காவிரி பிரச்சனையில் ஒரே மாதிரியாக செயல்படுகின்றன.
முந்தைய பாரதிய ஜனதா அரசு நாட்டின் பிரதமரை தலைவராகக் கொண்ட காவிரி நதிநீர் அமைப்பை ஏற்படுத்தியது. ஆனால் பாரதிய ஜனதா அரசால் தமிழகத்துக்கு எந்த ஒரு நீதியும் கிடைக்காது என்பதால் அதற்கான ஆதரவை வாபஸ் பெற்றோம்.
வரும் தேர்தலில் காவிரி பிரச்சனையில் தொடர்ந்து துரோகம் செய்து வரும் காங்கிரஸ் கட்சிக்கோ, பாரதிய ஜனதாவுக்கோ வாக்களிக்கக் கூடாது. காவிரி பிரச்சனை குறித்து பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை.
அப்படி குறிப்பிட்டிருந்தால் கர்நாடகாவில் அந்த கட்சி ஒரு தொகுதியை கூட பெற முடியாது. காவிரி பிரச்சனையில் நம்மை ஏமாற்றியது தான் கடந்த கால வரலாறு, அனுபவம்.
பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளால் காவிரி தண்ணீரை பெற முடியாது. அது அவர்களுக்கும் தெரியும் என ஜெயலலிதா பேசினார்.