சென்னை,ஏப்ரல் 17 – பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதோடு, அவ்வப்போது சில சினிமா நடிகர்களையும் சந்தித்து வருகிறார்.
அதன்படி, நாகர்ஜூனா, பவன் கல்யாண், ரஜினிகாந்த் ஆகியோரை சந்தித்தவர், நேற்று நடிகர் விஜயை சந்தித்தார். கோயம்புத்தூரில் நடைபெற்ற இந்த சந்திப்பில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்று விஜய் கூறியுள்ளார்.
இது குறித்து நடிகர் விஜய் கூறியதாவது :
ரொம்ப சாதாரண ஆளான என்னையும் மதித்து குருஜி நரேந்திரமோடி என்னை சந்தித்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சென்ற முறை அவர் சென்னைக்கு வந்த போது என்னை சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தமையால் என்னால் அவரை சந்திக்க முடியவில்லை. மீண்டும் கோயம்புத்தூர் வருகை தரும் பொது என்னை சந்திக்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தார்கள். எனவே கோயம்புத்தூரில் வைத்து நான் நரேந்திரமொடி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.
இந்த சந்திப்பில் எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது. இந்திய நாட்டின் மரியாதைக்குரிய தலைவர் என்னை சந்திக்க வெண்டும் என கேட்டதே எனக்கு பெருமைக்குரிய விஷயமாகும். அவரை சந்தித்த போது என்னிடம் அன்போடும் எளிமையாகவும் பேசினார். அவர் என்னிடம் என்னுடைய 21 வருட சினிமா வளர்ச்சியையும், அது சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்களையும் பேசினார்.
நாட்டின் முக்கிய தலைவர் என்னைப் பற்றி இந்த அளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறார் என நினைக்கும் போது எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது. நாங்கள் எந்த அரசியல் நோக்கத்தோடும் சந்திக்கவில்லை, அரசியல் பற்றி எதுவும் பேசிக்கொள்ளவும் இல்லை.
இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.