பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 17 – ஜசெக தலைவர் கர்பால் சிங் சென்ற கார், முன்னே சென்ற லோரியுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது என்பதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து புக்கிட் அமான் போக்குவரத்து தலைமை ஆணையர் முகமட் பாவுட் அப்துல் லத்தீப் கூறுகையில், கர்ப்பால் சிங் சென்ற டொயோட்டா ஆர்பார்ட் வாகனம் தனக்கு முன்னே சென்ற 5 டன் எடை லோரியின் வலது புறத்தில் மோதியுள்ளது.இதில் காரின் இடது புறம் முழுவதும் பலத்த சேதமடைந்துள்ளது என முதல் கட்ட விசாரணையின் தெரியவந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த விபத்தில் கர்ப்பாலும், அவரது உதவியாளர் மைக்கேலும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். கார் ஓட்டுநரும், கர்ப்பாலின் மகன் ராம்கர்ப்பாலும் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர் என்றும் முகமட் தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்த நேரத்தில் சாலை நிலவரம் சாதாரணமாகத்தான் இருந்ததாகவும், மழை இல்லையென்றும் முகமட் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் முகமட் தெரிவித்தார்.
இதனிடையே, இறந்த கர்ப்பால் சிங் மற்றும் அவரது உதவியாளர் மைக்கேல் ஆகிய இருவரது உடல் பினாங்கிலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அங்கு பினாங்கு முதல்வர் லிங் குவான் எங் உட்பட ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.