கம்பார் – மறைந்த கர்பால் சிங்கின் முன்னாள் ஓட்டுநர் சி.செல்வத்தின் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் தக்க ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அவரை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தது நீதிமன்றம்.
இந்தியப் பிரஜையான செல்வம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கர்பால் சிங்கின் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், பொறுப்பற்ற முறையில் அவர் கார் ஓட்டிச் சென்று விபத்தில் சிக்கி ஜசெக மூத்த தலைவர்களுள் ஒருவரான கர்பால் சிங் மரணமடைய நேர்ந்தது என்று கூறி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இந்நிலையில், அவர் மீதான வழக்கை நேற்று விசாரணை செய்த நீதிபதி மொகமட் இப்ராகிம் மொகமட் குலாம், இவ்வழக்கில் (prima facie case) அரசுத் தரப்பு தக்க ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தவறிவிட்டதாகக் கூறி தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்புக்குப் பின்னர் கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் பேசிய செல்வம், “நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன். எனது எல்லா பிரச்சினைகளில் இருந்து இப்போது வெளியே வந்துவிட்டேன். இதை விட எனக்கு வேறு எதுவும் வேண்டாம். என்னுடைய பெற்றோரையும், தம்பி, தங்கையையும் பார்க்க வேண்டும்” என்று செல்வம் தெரிவித்துள்ளார்.