ஏப்ரல் 17 – ஜனநாயக மலேசியாவில் ஈடுபாடு கொண்ட எண்ணற்ற மலேசியர்களின் செவிகளில் இடியாய் – நம் வீட்டில் ஒருவரை இழந்த சோகத்துக்கு நிகராய் – நம்மில் பலருக்கு நெஞ்சில் கனத்தை நிரப்பும் பொழுதாய் மலர்ந்தது இன்றைய காலை!
அந்த அளவுக்கு மலேசியர்களின் வாழ்க்கையில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக இரண்டறக் கலந்து விட்ட பெயர் கர்ப்பால் சிங்.
சிங்கம் என்ற பெயரின் இரண்டு எழுத்துகளை தன் பெயரிலும் கொண்டிருந்த அவர் – வழக்கறிஞர் உலகில் அந்த காட்டு ராஜா போலவே – தன்னிகரற்ற தலைவனாக – கர்ஜித்து உலா வந்தார்.
அந்த காட்டு ராஜாவைப் போலவே அனைவரிடத்திலும் அச்சத்தையும் – மரியாதையையும் ஒருங்கே தோற்றுவித்தவர் கர்ப்பால்.
தனது சட்டத் தொழிலில் அவர் கொண்டிருந்த அப்பழுக்கற்ற தீவிரமான ஈடுபாடு, தனது இறுதி நாள் வரை – 74வது வயது வரை – நீதிமன்றங்களில் வாதாடி வந்தஅவரது அயராத உழைப்பு – தான் கொண்டிருந்த கொள்கைகளுக்கு ஏதாவது ஒரு விதத்தில் பங்கம் வந்தால், அதற்காக கொதித்து எழுந்து போராடும் அவரது போர்க்குணம் – இப்படியாக அவரது பன்முகத் திறமைகளும் மலேசியர்களை மிகவும் கவர்ந்தவை.
தனது உடல் தள்ளுவண்டியில் முடக்கப்பட்டாலும், முடங்காத மனத்தோடும், வீரியத்தோடும் தொடர்ந்து அவர் அரசியல், சட்டத் தொழில் என உலா வந்தது அவரது மனோதிடத்தை வெளிப்படுத்தியதோடு – மற்றவர்கள் தங்களின் வாழ்க்கையில் சோர்வடையும் போதெல்லாம் அவரைப் பார்த்து கற்றுக் கொள்ளும் பாடங்களாக அமைந்தன.
இணையில்லா அரசியல் பங்களிப்பு….
இன்றைக்கு நாம் முதிர்ச்சியடைந்த ஜனநாயக சூழ்நிலையில் வாழ்வதற்கும், நம்மைப் பிணையாகப் பீடித்திருந்த பல நாடாளுமன்றச் சட்டங்கள் வீழ்வதற்கும் காரணம் கர்ப்பால் போன்றவர்கள் காலமெல்லாம் விடாது நடத்திய போராட்டங்களே என்பதை நாம் மறந்து விட முடியாது.
மலேசியாவில் நாடாளுமன்ற ஜனநாயகம் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் நிலையாய் நீடித்திருப்பதற்கு கர்ப்பால் போன்றவர்களின் பங்களிப்பும், தியாகமும் ஈடிணையற்றவை.
அதற்காக அவர் கொடுத்த விலையும் அதிகம்!
பல முறை நீண்ட கால சிறைவாசம் – எத்தனையோ தடவை அரசாங்கம் அவர் மீது தொடுத்த வழக்குகள் – இவையெல்லாம் ஜனநாயகத்தின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கைக்காக அவர் பெற்ற தியாகத் தழும்புகள்!
ஆனால், மக்களும் அவரைக் கைவிட்டு விடவில்லை.
1999ஆம் ஆண்டு தவிர மற்ற பொதுத் தேர்தல்கள் அனைத்திலும் மிகப் பெரும்பான்மை வாக்குகளில் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றே வந்திருக்கின்றார்.
மலேசிய அரசியல் அமைப்பைத் தற்காத்தவர் – செதுக்கியவர்
இன்றைக்கு நம் நாட்டில் வேரூன்றியிருக்கும் ஜனநாயக நாடாளுமன்ற அரசியல் அமைப்பு – கலாச்சாரம் – அஞ்சாது வீதிகளில் கூட இறங்கி போராடும் சுதந்திரத் தன்மை – இவை அனைத்திற்கும் ஆரம்ப காலம் முதல் அச்சாரம் போட்டவர்களில் கர்ப்பாலும் ஒருவர்.
அவரது அரசியல் பங்களிப்பு, சட்டத் துறை பங்களிப்பு – இரண்டுமே இன்றைய நவீன மலேசியாவை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியுள்ளன என்றால் அது மிகையாகாது.
மலாய்க்காரர் அல்லாத மக்களுக்கு ஆதரவாக – முஸ்லீம் அல்லாதவர்களுக்கு ஆதரவாக இந்த நாட்டில் தற்காப்புக் குரலாக – தன்னம்பிக்கைக் கேடயமாகத் திகழ்ந்தவர் கர்ப்பால்.
நமக்காக கர்ப்பால் இருக்கின்றார் – அவர் பார்த்துக் கொள்வார் என அவர்களெல்லாம் நிம்மதியாய் தூங்கிக் கொண்டிருக்க, அவர் மட்டும் அவர்களுக்காக விழித்திருந்தார்.
அவர்களுக்கெதிராக ஒரு சிறு துரும்பு அசைந்தாலும், முதல் ஆளாய் முன்னின்று போர்க்குரல் கொடுத்தார்.
அதற்காக, மாநில சுல்தானாக இருந்தாலும் – நாட்டின் பிரதமராக இருந்தாலும் – எவ்வளவு உயரிய பதவியைக் கொண்டிருவந்தவராக இருந்தாலும், கொஞ்சம் கூட தயங்காமல் – வார்த்தைகளை மென்று விழுங்காமல் – போராடியவர் கர்ப்பால்!
ஆனால், அதற்காக, மலாய்க்கார அன்பர்களையோ, முஸ்லீம் சகோதரர்களையோ அவர் அவமரியாதையாகவோ, தரக் குறைவாகவோ பேசியவர் அல்ல!
அன்வார் இப்ராகிமிற்காக நீதிமன்றங்களில் போராடிக் கொண்டிருந்த வழக்கறிஞர்களுக்கு தனது இறுதி மூச்சு வரை அவர்தான் தலைமை வகித்தார்.
அரசியல் ரீதியாக மட்டும் அல்லாமல், எத்தனையோ மலாய்க்கார மற்றும் முஸ்லீம் அன்பர்களுக்கு சட்ட ரீதியாகவும் போராடியவர் கர்ப்பால்.
அதனால், மலாய்க்கார, முஸ்லீம் அன்பர்களின் அபிமானத்தையும் அவர் சரிசமமாகப் பெற்றிருந்தார்.
அதனால்தான் இன்றைக்கு அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாக, அனைத்து அரசாங்க அமைச்சர்களும், தேசிய முன்னணி கட்சித் தலைவர்களும் அனுதாபச் செய்திகளை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
அவருக்கு எதிரான அரசியல் முகாம்களில் இருந்தவர்களும்கூட அவரது இழப்பை எண்ணி உருகுகின்றனர் – இரங்கல் செய்திகளை எழுதிக் கொண்டிருக்கின்றனர்.
கல்லில் சிலையாய், நம் நாட்டில் என்றும் நிலைத்திருக்கும் வண்ணம் அவரது அரசியல் பங்களிப்பும் சட்டத் துறை பங்களிப்பும் திகழும் என்பது மட்டும் திண்ணம்.
அந்த வகையில் ஒரு நிறைவான வாழ்க்கை வாழ்ந்து விட்டு – தனது அதே அரசியல் கொள்கைகளை தொடர்ந்து நடத்திக் காட்ட, அரசியல் வாரிசுகளாக மகன்களையும் உருவாக்கித் தந்து விட்டு, ஓர் அகோரமான கார் விபத்தினால் நம்மை விட்டு பிரிந்து செல்லும் கர்ப்பால் சிங்கை, கனத்த இதயத்தோடு நாம் வழியனுப்பி வைப்போம்.
நிகரில்லாத அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்போம்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும்,
அவரது தலைமைத்துவத்தை இழந்து நிற்கும் ஜனநாயக செயல் கட்சியின் உறுப்பினர்களுக்கும், தலைவர்களுக்கும்,
அவரது இழப்பினால் துயருற்றிருக்கும் நாடு தழுவிய அவரது அபிமானிகள் – ஆதரவாளர்களுக்கும் –
செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்.
-இரா.முத்தரசன்