விருதுநகர், ஏப்ரல் 19 – இந்தியா எங்கும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வரும் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், நேற்று தனது தமிழ் நாட்டுப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக வைகோ போட்டியிடும் விருதுநகர் தொகுதியில் பிரச்சார உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் “வைகோ நாடாளுமன்ற உறுப்பினராக வரும்போது, ஒரு சாதாரண உறுப்பினராக மட்டுமேஇருக்க மாட்டார். மாறாக, அரசாங்கத்தில் முக்கியமான முடிவுகளை எடுக்கக்கூடியஇடத்தில் அவர் இருப்பார் என்பதை நான் உறுதியாகத் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று கூறினார்.
“வைகோ, சில ஆயிரம் வாக்குகளில் வென்றால் மட்டும் போதாது; மாறாகஅவர் லட்சம் வாக்குகளுக்கும் மேல் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற வேண்டும்” என்றும் ராஜ்நாத் சிங் மேலும் கேட்டுக் கொண்டார்.
“தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள், அடிப்படையானபிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புகின்ற வகையில்தான்அரசியல் நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள். அனைவருக்கும் சமநீதி என்றுபாரதிய ஜனதா கட்சி சொல்லுவதைத் திசை திருப்ப முயல்கின்றார்கள். இந்தியாவின்அனைத்துக் குடிமக்களையும் ஒருசேர அரவணைத்துச் செல்வோம். இந்தியாவை ஒருவல்லரசாக ஆக்கிக் காட்டுவோம்” என்றும் ராஜ்நாத் சிங் முழங்கினார்.
இந்தத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சிபொறுப்பு ஏற்கப் போவது போல், அடுத்து இந்தத் தமிழகத்தில் எப்போதுசட்டமன்றத் தேர்தல் நடந்தாலும், இங்கே உருவாகி இருக்கின்ற தேசிய ஜனநாயகக்கூட்டணி உறுதியாக ஆட்சியைப் பிடிக்கும் – அதை யாராலும் தடுத்த நிறுத்தமுடியாதுஎன்றும் ராஜ்நாத் சிங் தனது உரையில் கூறினார்.
இலங்கைப் பிரச்சனை….
“ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வெளியுறவுக் கொள்கையில் தோல்வி அடைந்துவிட்டது. அவர்கள் உரிய அழுத்தத்தைக் கொடுத்து இருந்தால், இலங்கைத்தமிழர்களுக்கு நீதி கிடைத்து இருக்கும். ஆனால், இலங்கைத் தமிழர்களின்பிரச்சினைக்குத் தீர்வு காண தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி உரிய முறையில்நடவடிக்கைகள் மேற்கொள்ளும்” என்றும் இலங்கைப் பிரச்சனையைத் தொட்டு ராஜ்நாத் சிங் பேசினார்.
“தமிழக மீனவர்களுக்கு மட்டும் அல்ல; அனைத்து இந்திய மீனவர்களுக்கும் நான்ஒரு உறுதிமொழி அளிக்க விரும்புகிறேன். மத்தியில் நம்முடைய அரசுஅமைந்தவுடன், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக தேசிய மீனவர் நலவாரியம் அமைப்போம்; அவர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்போம்” இவ்வாறு விருதுநகரில் வைகோவுக்காக பிரச்சாரம் செய்த ராஜ்நாத் சிங் பேசினார்.