காட்மாண்டு, ஏப்ரல் 19 – இமய மலையில் உள்ள உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியதில் மலையேற்றப் பயிற்சியாளர்கள் 13 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து நேபாள சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் மலையேற்றப் பயிற்சிப் பிரிவு அதிகாரி ஒருவர் பின்வருமாறு கூறியிருக்கின்றார்:
“எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறும் வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக கயிறு கட்டும் பணியில் நேபாளத்தைச் சேர்ந்த ஷெர்பா இன மக்கள் சிலர் ஈடுபட்டிருந்தனர்.
இந்தப் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 5,800 மீட்டர் உயரத்தில் வெள்ளிக்கிழமை காலை 6:45 மணியளவில் ‘பாப்கார்ன் ஃபீல்டு‘ என்று அழைக்கப்படும் இடத்தில் திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது.
இந்த விபத்தில், பனிச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். 7 பேரைக் காணவில்லை.
இதையடுத்து நேபாள ராணுவம், இமாலய மீட்புக் குழு, நேபாள ஆயுதப்படைப் பிரிவு போலீஸ் ஆகியவை சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டன.”
மீட்கப்பட்ட 8 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும் அந்த நேப்பாள அதிகாரி மேலும் தெரிவித்தார்.
ஆண்டுதோறும் மலையேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஆண்டு தோறும் எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறுவதற்காக பதிந்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. தனிமனித உடல் உறுதியில், மலையேறும் முயற்சிகளில் உச்சகட்ட சாகசமாக, சாதனையாக எவரெஸ்ட் மலைமீது ஏறுவது கருதப்படுகின்றது.
இந்த ஆண்டு 300க்கும் மேற்பட்டோர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு அனுமதி பெற்றுள்ளனர்.
எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறும் முயற்சியில் ஈடுபட்டு இதுவரை 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.