காட்மாண்டு, ஏப்ரல் 26 – போதிய கட்டமைப்பு இல்லாத பூகோள அமைப்பு – அடிப்படை வசதிகள் இல்லாத குறை – திடீரென நிகழ்ந்து விட்ட நில நடுக்கத்தை எதிர்கொள்ள போதிய முன் எச்சரிக்கை நிவாரணப் பணிகள் இல்லாத சூழ்நிலை – இவை போன்ற காரணங்களால் நேபாளத்தில் நேற்று நிகழ்ந்த நிலநடுக்கத்தால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை மணிக்கணக்கில் உயர்ந்து கொண்டே வருகின்றது.
மரண எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என்றும் அஞ்சப்படுகின்றது.
மலேசிய நேரப்படி நள்ளிரவு வரை 1,400 பேர் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடிய விரைவில் மழை பெய்யலாம் என்ற எதிர்பார்ப்பினாலும், மேலும் மோசமான சேதங்களையும், விளைவுகளையும் நேபாளம் எதிர்நோக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகின்றது.
சிக்கிக் கொண்ட இந்தியர்களை விமானப் படை காப்பாற்றியது
நிவாரண உதவிகளை வழங்குவதற்கு இரண்டு இந்திய விமானங்கள் காட்மாண்டு விமான நிலையத்தை அடைந்துள்ளன. மேலும் இரண்டு விமானங்கள் கூடிய விரைவில் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையில் இந்திய விமானப் படையால் நிலநடுக்கத்தில் சிக்கிக் கொண்ட 55 இந்தியர்கள் காப்பாற்றப்பட்டு தற்போது டில்லி பாலம் விமான நிலையத்தை அவர்கள் வந்தடைந்துள்ளனர் என்றும் இந்தியத் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நேபாளத்தை உலுக்கியுள்ள வேளையில், அதன் பிறகு 16 சிறிய அளவிலான தொடர் அதிர்வுகள் நாட்டைத் தாக்கியுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏறத்தாழ, நாட்டின் 40 சதவீத நிலப்பகுதிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
மேலே உள்ள படம் 8,848 மீட்டர் (29,028 அடி) உயரமுள்ள எவரெஸ்ட் மலையின் தோற்றமாகும். இதன் மலையடிவாரத்தில் மலை ஏறுபவர்கள் அமைத்திருந்த முகாமையும் நிலநடுக்கம் தாக்கியுள்ளதில் 8 மலையேறிகள் வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.