பினாங்கு, ஏப்ரல் 19 – வியாழக்கிழமை அதிகாலை கார் விபத்தில் காலமான ஜசெக தலைவர் கர்ப்பால் சிங்கின் நல்லுடலுக்கு நாளைக் காலை 8.30 மணி முதல் 10.15 மணிவரை இறுதி மரியாதை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பினாங்கு மாநில அரசாங்கத்தின் அதிகாரத்துவ அந்தஸ்தோடு நாளை நல்லடக்கச் சடங்குகள் நடைபெறும் என்று பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
ஏறத்தாழ 2,000 முதல் 3,000 பேர் வரை நாளை நல்லடக்கச் சடங்கில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கர்ப்பாலுக்கு இறுதி மரியாதை செலுத்த விரும்புபவர்கள் நாளைக் காலை சீக்கிரமாகவே வந்துவிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
டேவான் ஸ்ரீ பினாங்கில் இறுதி மரியாதைக்காக கர்ப்பாலின் நல்லுடல் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும். அதன் பின்னர் பத்து கந்தோங் மயானத்தை நோக்கி அவரது இறுதி ஊர்வலம் நடைபெறும்.
கர்ப்பாலின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 1,000 மோட்டார் சைக்கிள்களும் உடன் செல்லும்.
கர்ப்பாலின் இறுதி ஊர்வலத்தின் போது அவரது நல்லுடலைத் தாங்கியிருக்கும் வாகனம் நான்கு முக்கிய இடங்களில் நிறுத்தப்படும்.
கர்ப்பால் தனது வாழ்நாளில் பெரும் பகுதியைக் வழக்கறிஞராகக் கழித்த பினாங்கு உயர் நீதிமன்றம், கிரீன் ஹால் சாலையில் உள்ள அவரது வழக்கறிஞர் அலுவலகம், அரசியலில் அவர் சட்டமன்ற உறுப்பினராகப் பல்லாண்டுகள் பணியாற்றிய பினாங்கு மாநில சட்டமன்றக் கட்டிடம், அவர் கல்வி கற்ற செயிண்ட் சேவியர் பள்ளிக்கூடம் ஆகிய இடங்களில் அவரது இறுதி ஊர்வல வாகனம் நிறுத்தப்படும்.
காலை 11.30 மணியளவில் புறப்படும் கர்ப்பாலின் இறுதி ஊர்வலம் பிற்பகல் 1 மணியளவில் பத்து கந்தோங் மயானத்தைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.