சிட்னி, ஏப்ரல் 19–புளுஃபின்(Bluefin) எனப்படும் குட்டி தானியங்கி நீர் மூழ்கிக் கப்பலின் வாயிலாக கடலடியில் மேற்கொள்ளப்பட்ட எம்எச்370 விமானத்தை தேடும் முயற்சி நான்கு முறை தோல்வியுற்ற நிலையில் இப்போது ஐந்தாவது முறையாக இந்த தானியங்கி நீர் மூழ்கிக் கப்பல் ஆழ்கடலில் தேடலை மேற்கொள்ள அனுப்பப்பட்டுள்ளது என்று கடலடித் தேடலின் கூட்டு ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.
புளுஃபின் மிக மெதுவாகத்தான் செயல்படும். இதுவரை 110 சதுர கிலோ மீட்டர் பகுதியைத் தான் அதனால் தேடிப்பார்க்க முடிந்ததாக அக்குழு குறிப்பிட்டுள்ளது.
42ஆவது நாளாக கடலின் மேற்பரப்பில் சுமார் 51,870 கி.மீட்டர் அளவுக்கு தேடும் பணி மேற்கொள்ளப்பட்டுவிட்டது. இப்பணியில் தற்போது 11 விமானங்களும் 12 கப்பல்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கு முன்னதாக புளுஃபின் நீர் மூழ்கிக் கப்பல் கடலுக்கடியில் அனுப்பப்பட்ட போது அது 15 ஆயிரம் அடி ஆழம் வரை தேடலை மேற்கொண்டது. ஆனால் இம்முறை இன்னும் அதிகமான ஆழத்திற்குச் செல்வது பாதுகாப்பான நடவடிக்கை இல்லை என்று தெரிந்தும் கூட அம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இந்த சூழ்நிலைகளில்தான், இதுவரை தேடியும் எந்தப் பலனுமில்லை என்று கடலடித் தேடலின் கூட்டு ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.