ஏப்ரல் 20 – மலேசியாவில் நாடாளுமன்ற ஜனநாயகம் தழைத்தோங்கவும், அனைவரும் மலேசியர்கள் என்ற கொள்கையோடும் இறுதி வரை அரசியலில் போராடிய வழக்கறிஞர் கர்ப்பால் சிங்கின் இறுதி ஊர்வலத்திலும், இறுதிச் சடங்குகளிலும் சுமார் 10,000 பேர் இன்று திரண்டனர்.
இறுதி மரியாதை செலுத்தியவர்களில் பினாங்கு மாநில ஆளூநர் துன் அப்துல் ரஹ்மானும் அடங்குவார். அவர் மரியாதை செலுத்த வந்தபோது பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கும், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களும் உடன் வந்தனர்.
அதிகாலை முதற்கொண்டே அதிகாரத்துவ இறுதிச் சடங்குகள் நடந்த டேவான் ஸ்ரீ பினாங் மண்டபத்தில் அனைத்து தரப்பட்ட மக்களும் குழுமத் தொடங்கினர்.
சீக்கிய மத முறைப்படி கர்ப்பாலுக்கு இறுதிச் சடங்குகள் நடந்தேறின.
அதன் பின்னர் அவரது நல்லுடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டி மீது புலியின் படம் கொண்ட துணி போர்த்தப்பட்டது.
அவரது நல்லுடல் தாங்கிய சவப் பெட்டியை அவரது மகன்களும் குடும்ப உறுப்பினர்களும் ஏந்தியபடி மண்டபத்தை விட்டு வெளியில் வர, காலை 11.30 மணியளவில் அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது.
பத்து கந்தோங் மின் சுடலை மயானத்தை நோக்கிச் சென்ற கர்ப்பாலின் இறுதி ஊர்வலம், அவரது நினைவுக்காக மூன்று இடங்களில் மரியாதைக்காக நிறுத்தப்பட்டது.
கர்ப்பால் வழக்கறிஞராக தன் வாழ்நாளில் பெரும் பகுதியைக் கழித்த பினாங்கு உயர்நீதிமன்றக் கட்டிடம், அவர் சட்டமன்ற உறுப்பினராக அரசியல் பணியாற்றிய பினாங்கு மாநில சட்டமன்றக் கட்டிடம், அவர் கல்வி கற்ற செயிண்ட் ஜோசப் பள்ளி ஆகிய மூன்று இடங்களில் ஊர்வலம் மரியாதைக்காக நிறுத்தப்பட்டது.
கர்ப்பாலுக்கு மாநில அதிகாரத்துவ அந்தஸ்துடன் கூடிய இறுதி மரியாதை வழங்கப்பட்டதால், இன்று பினாங்கு மாநில கொடிகள் மாநிலம் முழுவதும் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.
பிற்பகல் 1.30 மணியளவில் கர்ப்பாலின் இறுதி ஊர்வலம் பத்து கந்தோங் மின் சுடலை மயானத்தை சென்றடைந்தது.
அதன் பின்னர் கர்ப்பாலின் நல்லுடல் சீக்கிய மத அடிப்படையிலான சடங்குகளுக்குப் பின்னர் தகனம் செய்யப்பட்டது.