Home உலகம் தாய்லாந்தில் மறுதேர்தல் தேதியினை இறுதி செய்வதில் குழப்பம்!

தாய்லாந்தில் மறுதேர்தல் தேதியினை இறுதி செய்வதில் குழப்பம்!

509
0
SHARE
Ad

yingluckபாங்காக், ஏப்ரல் 25 – தாய்லாந்தில் பிரதமராகப் பதவி வகித்த இங்க்லக் ஷினவத்ரா, கடந்த 2006ஆம் ஆண்டில் பதவி இறக்கம் செய்யப்பட்ட அவரது சகோதரர் தக்‌ஷினின் கைப்பாவையாகச் செயல்படுவதாகக் கூறி அவரும் பதவியிலிருந்து இறங்க வேண்டும் என்ற போராட்டம் கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கியது.

அதிகரித்து வந்த எதிர்ப்புகளினால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி இங்க்லக்  அங்கு பொதுத் தேர்தலை நடத்தினார்.

ஆனால் அனைத்துத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறாத நிலையில் அரசியலமைப்பு நீதிமன்றம் அந்தத் தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்தது.

#TamilSchoolmychoice

இதனால் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைத் தீர்க்க புதிய தேர்தல் தேதியினை அறிவிக்கவேண்டி அங்கு அனைத்துக் கட்சிகளுடனான ஒரு சந்திப்பை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது.

ஆளும் கட்சியான புவா தாய் கட்சி உட்பட கிட்டத்தட்ட 58 கட்சிகள் நேற்று முன்தினம் பாங்காக்கில் ஒன்றுகூடி இந்த ஆலோசனையில் ஈடுபட்டன.

இருப்பினும் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி பாதுகாப்பு காரணங்களைக் குறிப்பிட்டு இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் எந்தத் தேதியும் முடிவு செய்யப்படாததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

குறைந்த பட்சம் ஜூலை மாதம் 20 ஆம் தேதி புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இல்லையெனில் எந்தவொரு எதிர்பாராத பிரச்சினைகளையும் தீர்க்க முடியாமல் நிலைமை மிகவும் உருவாகிவிடும் என்று தாய்லாந்தின் தேர்தல் ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.