Home உலகம் விடுதலைப் புலிகளை உயிர்ப்பிக்கும் செயல் முளையிலேயே கிள்ளி எறியப்படும் – இலங்கை அரசு

விடுதலைப் புலிகளை உயிர்ப்பிக்கும் செயல் முளையிலேயே கிள்ளி எறியப்படும் – இலங்கை அரசு

559
0
SHARE
Ad

srilankaகொழும்பு, ஏப்ரல் 26 – இலங்கையில் 2009 – ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடந்த இறுதி கட்ட போரில், ஏராளமான விடுதலைப்புலிகளும், ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களும் கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் அமைப்பை முற்றிலும் அழித்து விட்டதாக அந்நாடு அறிவித்தது.

இந்த நிலையில் அங்கு தடை செய்யப்பட்ட பல்வேறு தமிழ் அமைப்புகள், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு திரட்டி வருவதாக இலங்கை சமீபத்தில் குற்றம் சாட்டியது. மேலும் இது தொடர்பாக 65 விடுதலைப்புலிகளை கைது செய்துள்ளதாகவும் அந்நாடு அறிவித்தது. இந்த செயல்களால், விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் துளிர்விடக்கூடும் என்ற அச்சம், இலங்கை அரசை தொற்றிக்கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice

எனவே விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் புத்துயிர் பெறாமல் தடுப்பதற்கு அந்நாடு தீவிர முயற்சிகளை கையாண்டு வருகிறது. இது குறித்து இலங்கையின் வெளியுறவு மந்திரி ஜி.எல்.பெரீஸ் கூறியதாவது:-

“இலங்கையில் எந்த பகுதியிலும், எந்த நிலையிலும் மீண்டும் தீவிரவாதம் தலையெடுக்காமல் இருக்க அரசு தீவிர காட்டி வருகிறது. அந்தவகையில் நாட்டின் ஒட்டு மொத்த சூழ்நிலையும் தற்போது அரசின் கட்டுக்குள் உள்ளது. தீவிரவாத நடவடிக்கைகளுக்காக பல்வேறு உலக நாடுகளில் இருந்து கணிசமான தொகை இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.”

“இது தொடர்பாக கடந்த சில வாரங்களாக அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. மேலும், இந்த பணம் அனுப்பப்பட்ட வங்கி கணக்குகள் உள்ளிட்டவையும் ஆய்வு செய்யப்பட்டது. இவ்வாறு விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்ட 65 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் விசாரணைக்குப்பின் 19 பேர் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். இலங்கையில் தீவிரவாத செயல்களுக்காக, விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிரூட்டும் வகையில் மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கையும் முளையிலேயே கிள்ளி எறியப்படும்” என்று பெரீஸ் கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் நிறுவ முயன்ற கோபி என்பவர் உட்பட மூவர், இந்த மாதத்தின் தொடக்கத்தில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.