Home உலகம் தைவானில் அணு உலைகளை மூட அரசு முடிவு!

தைவானில் அணு உலைகளை மூட அரசு முடிவு!

406
0
SHARE
Ad

taiwan2தைபே, ஏப்ரல் 26 – பசிபிக் பெருங்கடலின் நில அதிர்வு வளையத்தினுள் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று தைவான். அங்கு ஏற்கனவே மூன்று அணுமின்உலைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. தற்போது நான்காவது அணுமின்உலை ஒன்று கட்டி முடிக்கப்படும் தருவாயில் உள்ளது.

அங்கு தேவையான மின்சாரத்தில் 40 சதவிகிதம் நிலக்கரி மூலமாகவும், 30 சதவிகிதம் இயற்கை எரிவாயு மூலமாகவும், 18.4 சதவிகிதம் அணுமின் பயன்பாடு மூலமாகவும் பெறப்படுகின்றது. தற்போது இந்நாட்டில் செயல்பட்டு வரும் உலைகளில் முதலாவது 2018-19ஆம் ஆண்டிலும், இரண்டாவது உலை 2021-23 ஆம் ஆண்டிலும் மூடப்படவேண்டும் என்று அரசுத்தரப்பு தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

எனவே தற்போது கட்டப்பட்டு வரும் புதிய உலை வரும் 2016 ல் உற்பத்தியைத் துவக்கும் என்று அரசு கூறிவந்தது. ஆனால் கடந்த 2011ஆம் ஆண்டில் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியினால் அங்குள்ள புகுஷிமா அணுமின் உலையில் நேர்ந்த பாதுகாப்பு பிரச்சினைகளைக் கண்டதுமுதல் தைவானிலும் எதிர்ப்புகள் வலுப்பெறத் தொடங்கின.

#TamilSchoolmychoice

தைவான் மக்களும், எதிர்க் கட்சிகளும் இந்தத் திட்டத்தைத் தீவிரமாக எதிர்த்து வந்த போதிலும் ஆலையின் கட்டுமானத்தை நிறுத்துவதற்கு அந்நாட்டு பிரதமர் கடந்த வாரம் மறுப்பு தெரிவித்திருந்தார். ஆனால் அதிபர் மா இங் ஜியோவும், ஆளும்கட்சி உறுப்பினர்களும் நேற்று முன்தினம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் புதிய அணுமின் உலையின் கட்டுமானம் முடிந்தவுடன் அதன் செயல்பாட்டைத் தொடங்குவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர் என்று பத்திரிகை செய்திகள் தெரிவித்துள்ளன.

இந்த முடிவானது அதிபருக்கும், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் இடையே நடக்கவுள்ள கூட்டத்தை முன்னிட்டு எடுக்கப்பட்டது என்று கருதப்படுகின்றது. மேலும் இந்த முடிவினால் மின்சாரத்தின் விலை அதிகரிப்பதன்மூலம் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு சந்தை நிதிநிலைமையும் மாறக்கூடும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.