கோலாலம்பூர், ஏப்ரல் 26 -இன்று பிற்பகல் சுபாங் ஆகாயப் படை விமான நிலையத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா வந்து இறங்கிய கணம் முதல், ஹாலிவுட் பட பாணியில் பாதுகாப்பு காட்சிகள் மலேசியாவிலும் அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
50 ஆண்டுகளுக்குப் பின்னர் மலேசியாவிற்கு வருகை தரும் அமெரிக்கா அதிபரான ஒபாமாவின் வருகையை முன்னிட்டு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளை மலேசிய காவல்துறையும் அமெரிக்கா பாதுகாப்பு அதிகாரிகளும் ஏற்படுத்தியுள்ளனர்.
தலைநகரெங்கும் அடிக்கடி வாகனப் போக்குவரத்துகள் நிறுத்தி வைக்கப்படும் என்றாலும் நீண்ட நேரத்திற்கு வாகனங்கள் காக்க வைக்கப்படமாட்டது என காவல் துறை அறிவித்துள்ளது.
ஒபாமாவுடன் அவரைப் பாதுகாக்க உடன் வரும் கறுப்பு கண்ணாடி, கறுப்பு கோட் சூட் அணிந்த அமெரிக்க பாதுகாப்பு வீரர்கள் ஆங்கிலப் பட பாணியில் அவருடன் உலா வருவார்கள்.
இந்தப் பாதுகாப்பு அதிகாரிகள் எந்தவிதமான சூழ்நிலையிலும் – துப்பாக்கிச் சூடு இராசயன ஆயுதத் தாக்குதல், வெடிகுண்டு மற்றும் எப்படிப்பட்ட தாக்குதல்களிலிருந்தும் அமெரிக்க அதிபரை பாதுகாக்கும் வழிமுறைகளில் கடுமையான பயிற்சி எடுத்தவர்கள் ஆவர்.
இரண்டு வாரங்கள் முன்னதாகவே அமெரிக்கா பாதுகாப்பு அதிகாரிகள் கோலாலம்பூர் வந்து பாதுகாப்புக்கான முன்னேற்பாடுகளை செய்திருந்தனர்.
இதற்கிடையில் அமெரிக்க அதிபர் வருகையை முன்னிட்டு அரசாங்கம் எல்லா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என்றும் அதனை தான் நேரடியாக கண்காணிப்பதாகவும் பிரதமர் நஜிப் அறிவித்துள்ளார்.