புதுடில்லி, ஏப்ரல் 26 – பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ள இந்தியத் தேர்தல் பிரச்சாரத்தின் திருப்பு முனை சம்பவங்களுள் ஒன்றாக, காங்கிரஸ் கட்சியின் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒன்றுவிட்ட சகோதரர் டால்ஜிட் சிங் பாஜகவில் நேற்று வெள்ளிக்கிழமை தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
இதனை அடுத்து பிரச்சாரங்களில் எதுவும் கலந்து கொள்ளாமல் – வெளியே தலை காட்டாமல் இருந்த மன்மோகன் சிங் இந்த விவகாரம் குறித்து தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த மன்மோகன் சிங்கிடம் இது தொடர்பில் கேள்வி கேட்கப்பட்டபோது, “எனக்கு வருத்தமாக உள்ளது. எனினும் இது தொடர்பில் எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவர்கள் எல்லோரும் வயது வந்தவர்கள், சுயமாக முடிவெடுக்கக் கூடியவர்கள்” என்று அவர் பதிலளித்தார்.
இதனால் மூக்கு உடைபட்ட நிலைமைக்கு காங்கிரஸ் கட்சியும் ஆளாகியுள்ளது.
மோடி முன்னிலையில் டால்ஜிட் சிங் பாஜகவில் இணைந்தார்
மன்மோகன் சிங்கின் ஒன்றுவிட்ட சகோதரர் டால்ஜிட் சிங் கோலி, பாஜக தலைவர் நரேந்திர மோடி தலைமையில் அமிர்தசரஸ் நகரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக கட்சியில் இணைந்து கொண்டார்.
இந்தியாவில் ‘மோடி அலை’ என்று எதுவும் இல்லை என்று மன்மோகன் சிங் தெரிவித்த மறுநாளே அவரது தம்பி முறை உறவினர் பாஜகவில்இணைந்து கொண்டுள்ளது காங்கிரசுக்கு பெரும் தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது.
அதே வேளையில், பாஜகவின் பெருகி வரும் ஆதரவு – நாட்டையை மையம் கொண்டுள்ள மோடி அலை ஆகியவற்றின் முக்கிய குறியீடாக மன்மோகன் சிங்கின் சகோதரரின் பாஜக இணைப்பு கருதப்படுகின்றது.
மன்மோகன் சிங் நடத்தப்படும் விதம் சரியல்ல
டல்ஜிட் சிங் கோலியை கட்சிக்குள் வரவேற்ற பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி அவரது வருகை பாஜகவிற்கு மேலும் வலு சேர்த்துள்ளதாக தெரிவித்தார்.
இது தொடர்பில் பேசிய பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன்ராகுல் காந்தியால் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நடத்தப்படும் விதத்தால் டல்ஜிட் சிங் கோலி வருத்தம் அடைந்துள்ளதாக தெரிவித்தார்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் குடும்பத்தினரும் இது தொடர்பில் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
மன்மோகன் சிங்குக்கும், தல்ஜீத் சிங் கோலிக்கும் பல ஆண்டுகளாக எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும் பிரதமர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.