கோலாலம்பூர், ஏப்ரல் 27 – கோலாலம்பூர் வந்தடைந்த அமெரிக்க அதிபருக்கு நேற்று இரவு அரச விருந்தளித்து கௌரவித்த மலேசிய மாமன்னர் துவாங்கு அப்துல் ஹாலிம் முவாசாம் ஷா, காணாமல் போன மாஸ் விமானத்தைத் தேடும் பணியில் இன்றுவரை சளைக்காமல் ஆதரவும், ஒத்துழைப்பும் தந்து வரும் அமெரிக்க அரசாங்கத்திற்கு தனது நன்றியைப் புலப்படுத்திக் கொண்டார்.
அரச விருந்தில் உரையாற்றிய மாமன்னர், காணாமல் போன மாஸ் விமானத்தில் இருந்த பயணிகளில், அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட பல நாட்டவர்களும் இருந்தனர் என்பதை நினைவு கூர்ந்தார்.
இந்த ஒத்துழைப்பு இரண்டு நாட்டவர்களுக்கும் இடையில் இருக்கும் நெருக்கமான நட்புறவையும், கடப்பாட்டையும் எடுத்துக் காட்டுகின்றது என்றும் பேரரசர் தனது உரையில் தெரிவித்தார்.
பேரரசரின் துணைவியாரும் இந்த அரச விருந்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
“நமக்குள் தொடர்ந்து கொண்டிருக்கும் நட்புறவு, தங்களின் வருகையின் மூலம் மேலும் வலுவடையும் என்பதோடு, பொருளாதாரம், பாதுகாப்பு, தற்காப்பு, கல்வி, விஞ்ஞானம், தொழில் நுட்பம், மக்களுக்கிடையிலான தொடர்புகள் போன்ற பலதரப்பட்ட அம்சங்களில் தங்களின் வருகையை முன்னிட்டு நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தைகள் இரு நாட்டவர்களுக்கும் நன்மைகளைக் கொண்டு வரும் என நம்புகின்றேன்” என்றும் பேரரசர் நம்பிக்கை தெரிவித்தார்.
அமெரிக்க அரசாங்கத்தின் ஒத்துழைப்பு, உதவிகள் மூலம் 30 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட மலேசியா விரைவில் வளர்ச்சி பெற்ற நாடாக உருமாறும் என்றும் பேரரசர் தனது அரச உரையில் குறிப்பிட்டார்.
இந்த வட்டாரம் வளர்ச்சி அடையவும், அமைதிப் பிரதேசமாகத் திகழவும் அமெரிக்கா எடுக்கும் முயற்சிகளுக்கும் மலேசியா துணை நிற்கும் எனவும் பேரரசர் தனது உரையில் உறுதியளித்தார்.