Home இந்தியா உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு மீதான தடையை நீக்கியது

உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு மீதான தடையை நீக்கியது

487
0
SHARE
Ad

05-1394025953-jayalalitha-11-600புதுடில்லி, ஏப்ரல் 28 – அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா மீது பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு வழக்கின் விசாரணைக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக தடையை நீக்குவதாக இந்திய உச்ச நீதிமன்றம் திங்களன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்த சொத்து குவிப்பு வழக்கு தொடர்பில் அந்தவழக்கின் அரச வழக்கறிஞரான பவானி சிங்கின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், அவரால் அந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக இயலவில்லை என்று அவர் சார்பில் தொடுக்கப்பட்ட மனுவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி அன்று சொத்து குவிப்பு வழக்கின் விசாரணைக்கு 3 வார காலத் தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

திங்களன்று உச்ச நீதிமன்றத்தில் பவானி சிங்கின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நாகேந்திர ராய், பவானி சிங்கின் உடல் நிலை தற்போது சரியாகியுள்ளதாகவும், ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் பவானி சிங் ஆஜராக தயாராக இருப்பதாகவும் தெரிவித்ததை அடுத்து, இந்த சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை மீது வழங்கப்பட்டிருந்த தற்காலித் தடையை நீக்குவதாக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அமர்வு, அடுத்த கட்ட விசாரணைகளில் பவானி சிங் தொடர்ந்து ஆஜராக வேண்டும் என்றும், எந்த காரணங்களை காட்டியும் அவர் ஆஜராவதிலிருந்து விலகக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.