ஏப்ரல் 29 – மைக்ரோசாஃ ப்ட் நிறுவனத்தின் உலாவியான ‘இன்டர்நெட் எக்ஸ்புளோரர்’ (Internet Explorer) -ல் தரவு பாதிப்பினை ஏற்படுத்தும் புதிய ‘பக்’ (Bug) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பக் மூலமாக பயனர்களின் முக்கியத் தகவல்களை அழிக்கவும், திருடுவும் முடியும் என்பதால் பயனர்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரரைப் பயன்படுத்த வேண்டாம் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
இந்த புதிய பக் குறித்து மைக்ரோசாஃ ப்ட் நிறுவனம் தனது அறிக்கையில் கூறியிருப்பாதாவது:-
“புதிதாக உருவாகியுள்ள இந்த பக், கணினியின் நினைவகத்தில் பாதிப்பினை ஏற்படுத்த வல்லது. இதன் மூலமாக தகவல் திருடர்கள், சுலபமாக பயனர்களின் தரவுகள் மற்றும் தகவல்களை அழிக்கவும், திருடவும் இயலும். இதன் பாதிப்பு Explorer versions 6 – 11 வரை உள்ளது” என்று கூறியுள்ளது.
இந்த பக்கினை சரி செய்ய மைக்ரோசாஃ ப்ட் நிறுவனம் கூறியுள்ள வழிமுறைகள் சாதாரண பயனர்களுக்கு மிகக் கடினமானதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
இந்த புதிய பக், ‘விண்டோஸ் எக்ஸ்பி’ (Windows XP) பயனர்களை மிக அதிகம் பாதிக்கும் எனக் கூறப்படுகின்றது. ஏனெனில், மைக்ரோசாஃ ப்ட் நிறுவனம் விண்டோஸ் எக்ஸ்பிக்கான சேவையை இம்மாதம் 8-ஆம் தேதியுடன் நிறுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.