இஸ்லாமாபாத், ஏப்ரல் 30 – நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரானால் இருநாட்டு வட்டார அமைதி சீர்குலையும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார் அலி கான் தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமைந்தால், பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமை கைது செய்து இந்தியாவுக்கு இழுத்து வருவோம் என்று பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியிருந்தார்.
இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் உள்துறை மந்திரி சவுத்ரி நிசார் அலி கான் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-
“தாவூத் இப்ராகிமுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்துள்ளது என்ற மோடியின் பேச்சு, பாகிஸ்தான் மீதுள்ள பகையின் உச்சகட்ட எல்லையை குறிப்பிடும் விதமாகவும், ஆத்திரமூட்டும் வகையிலும் அமைந்துள்ளது. இந்த அச்சுறுத்தலுக்கு எல்லாம் பயந்துவிடக் கூடிய அளவுக்கு பாகிஸ்தான் வலிமையற்ற நாடல்ல என்பதை உணர வேண்டும்.”
“முதலில், தாவூத் இப்ராகிம் எங்கு வாழ்கிறார்? என்பதை மோடி முடிவு செய்துக் கொள்ள வேண்டும். அவர் இந்தியாவின் பிரதமரானால் வட்டார அமைதி நிலைகுலைந்துப் போகும். இருநாடுகளுக்கிடையே அமைதியை நிலைநாட்ட விரும்பும் பாகிஸ்தானின் முயற்சியை பலவீனமாக எண்ணிவிடக் கூடாது.”
என்று அவர் தம் அறிக்கையில் கூறியுள்ளார்.