கொழும்பு, மே 1 – இலங்கையில் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி ஆட்சியில் உள்ளது. இக்கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் அன்னிய நாட்டு முதலீட்டை பெருக்க நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய அனுமதி அளிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அதன்மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் ஆளும் கட்சி கூட்டணியை சேர்ந்த 51 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களில் சிலர் எதிர்த்தும் வாக்களித்தனர். பலர் ஓட்டு போட வராமல் புறக்கணித்தனர்.
இருந்தாலும், ஓரளவு மெஜாரிட்டியுடன் தீர்மானம் நிறைவேறியது. இந்த வாரம் மதகலவரம் ஏற்படுவதை தடுக்க சிறப்பு போலீஸ் பிரிவு அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கும் கூட்டணி கட்சிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜாதிகா ஹெலா உருமயா மற்றும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அரசின் இந்த நடவடிக்கை மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என தெரிவித்துள்ளது. பிரதான எதிர்க்கட்சி யான ஐக்கிய தேசிய கட்சியும் அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, அடுத்த ஆண்டு (2015) நாடாளுமன்ற தேர்தலை நடத்த அதிபர் ராஜபக்சே முடிவு செய்துள்ளார். ஆனால் கூட்டணி கட்சிகளின் இது போன்ற எதிர்ப்பு செயல்பாடுகளால் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து அதிபர் ராஜபக்சே தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.