ஜித்ரா, மே – ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சி ஆதரவாளர்களும், பொதுமக்களும் இன்று பிற்பகல் தலைநகர் டத்தாரான் மெர்டேக்கா வளாகத்தில் கூடி, ஆர்ப்பாட்டம் நடத்திய வேளையில்,
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து அமல்படுத்தப்பட உள்ள பொருள்சேவை வரி (ஜிஎஸ்டி) நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் நல்ல பலன்களைக்கொண்டு வரும் என்று டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அந்த வரி விதிப்பைத் தற்காத்துப் பேசியுள்ளார்.
பொருள் சேவை வரிக்கு எதிராக கோலாலம்பூரில்ஆர்ப்பாட்டங்களை சிலதரப்பினர் நடத்தினாலும் நாட்டின் எதிர்காலத்திற்கு அந்த திட்டம் உத்தரவாதமளிக்கும் என்பதுதான் உண்மை நிலை என்று பிரதமர் குறிப்பிட்டார்.
“பகுத்தறிவுடன் நாம் சிந்தித்தால், மக்களின் நலனுக்காகவேஅரசாங்கத்தின் ஒவ்வொரு கொள்கையும் மேற்கொள்ளப்படுவதை நாம்புரிந்துகொள்ள முடியும். இதன் பலன்களை ஓரிரு நாட்களில் எதிர்பார்க்காதீர்கள். இன்று விதையை நடும்நீங்கள், நாளையே பலனை எதிர்பார்க்கிறீர்கள்” என்றும் அவர் கூறினார்.
கெடா, ஜித்ராவில் உள்ள வாவாசான் மண்டபத்தில் நடைபெற்ற 2014ஆம் ஆண்டிற்கானஅரசாங்க சேவை தொழிலாளர் தின கொண்டாட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றியபோதுஅவர் மேற்கண்டவாறு கூறினார்.
மாற்றங்களையும் உருமாற்றுத் திட்டங்களையும் கொண்டு வரும் அரசாங்கத்தின் நோக்கத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென நஜீப் கேட்டுக் கொண்டார்.
“மாற்றங்களை தடுத்து நிறுத்த முடியாது, அவை தொடர வேண்டும். நாம் மாறாவிட்டால், பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்குவோம். மக்கள் சிரமத்திற்குஆளாவர்” என்றும் அவர் கூறினார்.