கோலாலம்பூர் – கால ஓட்டத்தில் அரசியல் காட்சிகள் மட்டுமல்ல, அரசியல்வாதிகளின் சிந்தனைகளும், கொள்கைகளும்கூட மாறுகின்றன என்பதை நிரூபிப்பது போல் இருந்தது நேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி எனப்படும் பொருள்சேவை வரிக்கான எதிர்ப்புப் பேரணியில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் நேரடியாகக் கலந்து கொண்டது.
நேற்றைய ஜிஎஸ்டி எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் மகாதீர் – அருகில் அமானா கட்சித் தலைவர் முகமட் சாபு…
தனது ஆட்சிக் காலத்தின்போது, பொதுக் கூட்டங்களுக்கும், பொதுமக்கள் பேரணிகளுக்கும் கடுமையான சட்டதிட்டங்களால் தடைவிதித்த மகாதீர், நேற்று ஜிஎஸ்டி எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்டார்.
பேரணியில் கலந்து கொண்டவர்களிடையே அவர் உரையாற்றவும் செய்தார்.
ஏற்கனவே, பெர்சே பேரணியில் கடந்த ஆண்டு அவர் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுமார் 2,000 முதல் 3,000 வரையிலான பொதுமக்கள் இந்த எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி பொருள்சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டதை நினைவுகூரும் வகையில் இந்த எதிர்ப்புப் பேரணி நடத்தப்பட்டது.