வெறும் சம்பவங்கள், நகைச்சுவையான வசனங்களோடு திரைக்கதையை நகர்த்திச் செல்லும் படங்களின் வரிசையில் வெளிவந்துள்ள இந்த “பேய் பேசுறேன்” படத்தில் எந்தவித லாஜிக்கும் இல்லாமல், இஷ்டத்துக்கு ‘கதை விடுகிறார்கள்’.
பேய் செல்பேசியில்கூட பேசுகின்றது. சிம் கார்டைக் கூட தானே போட்டுக் கொள்கின்றது. செல்பேசியில் ஒட்டிக்கொண்டிருக்கும் இரத்தக்கறையில் ஒட்டிக் கொண்டே ஒரு வீட்டிற்குள் நுழைந்து விடுகின்றது. பேயை காரில் கூட்டிக் கொண்டு இன்னொரு வீட்டில் கொண்டு சென்றுவிடும் காட்சி கூட உண்டு. சர்வ சாதாரணமாக ஒரு உடம்பில் இருந்து இன்னொரு உடம்புக்குள் நுழைந்து கொள்கின்றது –
இப்படியாக இதுவெல்லாம் சாத்தியமா என்றும் மட்டும் கேட்காமல், சில சிரிப்பு வெடிகளுக்காக மட்டும் படத்தைப் பார்த்து விட்டு வரலாம்.
தனது சொந்தப் படம் என்ற விளம்பரத்துடன் படத்தை வெளியிட்டுள்ள பிரபல இயக்குநர் சுந்தர் சி. அதன் உள்ளடக்கத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
கதை – திரைக்கதை
இரவு நேரத்தில் குல்பி ஐஸ் விற்று, அதில் மயக்க மருந்தைக் கலந்து, வீடுகளில் புகுந்து திருடுபவர் கதாநாயகன் வைபவ். முதல் பாதிக் கதையில் தனக்கு வேலை வாங்கிக் கொடுக்கும் கவிதா என்ற பெண்ணிடம் (காக்கா முட்டை புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ்) அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தின் பொருட்களை வைபவ் திருடி விற்றுவிட, அதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் காதல் ஏற்படுகின்றது.
ஐஸ்வர்யாவின் அண்ணன் விடிவி கணேஷ் சாவு வீடுகளில் குத்துப்பாட்டு கற்றுக் கொடுக்கும் நடனக் கலைஞர்.
ஒருமுறை ஒரு கார்விபத்தைப் பார்க்கின்றார் வைபவ். விபத்தில் மரணமடைந்தவரின் செல்பேசியை திருட்டுத்தனமாக எடுத்துக் கொண்டு வந்து விடுகின்றார். அதில் ஒட்டிக் கொண்டிருக்கும் இரத்தக் கறையின் வழியாக ஒரு பெண் பேயும் (ஓவியா) -அவரது அறைக்குள் வந்து விடுகின்றது.
சரவணனைத் தேடிக் கண்டுபிடிக்கும் வைபவ்-கணேஷ், பேயையும், சரவணனையும் சேர்த்து வைத்தார்களா என்பதுதான் இறுதிப் பாகக் கதை.
ஏற்கனவே பார்த்த படங்களின் தொகுப்பு
கதையின் எந்தப் பகுதியிலும் புதுமையில்லை. இதற்கு முன் வந்த பேய்ப்படங்களில் சொல்லப்பட்ட கதைகளின் சம்பவங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக ஒரே படத்தில் சிரமமில்லாமல் தொகுத்திருக்கின்றார் இயக்குநர் எஸ்.பாஸ்கர்.
கொஞ்சமாவது கூடுதல் சிரத்தை காட்டியிருக்கக் கூடாதா பாஸ்கர் சார்?
மற்றபடி, படம் முழுக்க பேசிக் கொண்டே இருக்கும் கதாபாத்திரங்கள் அவ்வப்போது வெடிக்கும் நகைச்சுவை வெடிகளை மட்டும் இரசித்துக் கொள்ளலாம். அதிலும் கூட அபாரமான, புதுமையான, குபீர் சிரிப்பை வரவழைக்கக் கூடிய வித்தியாசமான வசனங்களோ, சம்பவங்களோ இல்லை.
பேய் வரும் காட்சிகளில் பயம் ஏற்படுத்துவதை விட சிரிப்பு ஏற்படுத்தத்தான் அதிகம் முயற்சி செய்திருக்கின்றார்கள்.
இறுதிவரை படத்தை இரசிப்பதற்கு உதவுவது விடிவி கணேஷ்தான். குத்துப் பாட்டு நடன ஆசிரியராக வரும் அவர் பேயுடன் சவால் விட்டு வசனம் பேசியும், அவருக்கே உரித்தான குரல் மொழியில், சென்னை பாஷையில் கலக்கியும் படத்தை நகர்த்திக் கொண்டு செல்கின்றார்.
கருணாகரனின் நடிப்பும் கச்சிதம்.
பொழுது போகவில்லை என்றால் – ஏதாவது படம் பார்த்துத்தான் அந்தப் பொழுதைப் போக்கவேண்டும் – என்றால், ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ போய் பார்த்து விட்டு கொஞ்சம் சிரித்து விட்டு வரலாம்.
மற்றபடி படத்தைப் பற்றி விலாவாரியாக விவரிக்கக் கூடிய சினிமா அம்சங்கள் ஏதும் இல்லை!
-இரா.முத்தரசன்