கோயம்பேடு – தொகுதிப் பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தை நடத்த மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ தலைமையில், திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் நேற்று கோயம்பேட்டிலுள்ள விஜயகாந்த் அலுவலகத்திற்குச் சென்றுள்ளனர்.
அங்கு நடந்தவை பற்றி தேமுதிக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டவையாக ஊடகங்களில் வந்துள்ள செய்தி என்னவென்றால், மக்கள் நலக்கூட்டணி போட்டியிட விரும்பும் 110 தொகுதிகளின் பட்டியலை விஜயகாந்திடம் கொடுத்துள்ளனர். அதை வாங்கிப் பார்த்த விஜயகாந்த், சுதீஷிடம் ஒப்படைத்துள்ளார்.
அதை எடுத்துக் கொண்டு தனது அறைக்குச் சென்ற சுதீஷ், ஒரு ஐந்து நிமிடங்களுக்குப் பின்னர் விஜயகாந்திடம் வந்து, மநகூ தலைவர்கள் கேட்கும் தொகுதிகளில் 70 தொகுதிகள் தேமுதிக போட்டியிடவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அதைக் கேட்ட விஜயகாந்த, 10 தொகுதியை மட்டுமே விட்டுத்தருவேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டாராம். ஆனால் பட்டியலில் உள்ள 30 வட மாவட்ட தொகுதிகளை தேமுதிக விட்டுக் கொடுத்தே ஆக வேண்டும் என்று மநகூ தலைவர்கள் பிடிவாதம் பிடித்தனராம்.இறுதியாக கட்சியினரிடம் ஆலோசனை செய்த பிறகு சொல்கிறேன் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
இந்தப் பஞ்சாயத்துக்குப் பின், கோயம்பேட்டில் உள்ள பிரபல உணவகத்தில் மநகூ தலைவர்களுக்கு விஜயகாந்த் சார்பில் விருந்து உபசரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம்.
ஆனால், தொகுதிப் பங்கீடு சரியாக முடிந்தால் மட்டுமே விருந்தில் கை நனைப்போம் என்று தன்மானத்தோடு அங்கிருந்து மநகூ தலைவர்கள் சென்றுவிட்டதாகக் கூறப்படுகின்றது.