கோலாலம்பூர் – நேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி எனப்படும் பொருள்சேவை வரிக்கான எதிர்ப்புப் பேரணி எந்தவித அசம்பாவிதமும் இன்றி நடந்து முடிந்த நிலையில் ஒரே ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசியக் குற்றவியல் பிரிவு (பீனல் கோட்) 504வது சட்டத்தின் கீழ் அந்த நபர் கைது செய்யப்பட்டார். வேண்டுமென்றே அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக முகமட் சஃப்ரான் முகமட் சூடி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் காவல் துறை தலைவர் அமார் சிங் உறுதிப்படுத்தியுள்ளார்.
பொருள் சேவை வரி எதிர்ப்புப் பேரணியில் உரையாற்றும் மகாதீர்…
அந்த நபர் பிரதமர் நஜிப்பின் கேலிச் சித்திரம் ஒன்றை காவல் துறை வாகனம் ஒன்றில் ஒட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
24 வயதான அந்நபர் தற்போது கோலாலம்பூர் டாங் வாங்கி காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். காவல் துறை ரோந்து வாகனம் ஒன்றின் மீது நஜிப் குறித்து சில வாசகங்களுடன் வரையப்பட்ட கேலிச்சித்திரம் ஒன்றை ஒட்டினார் என்பதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கைது தவிர்த்து மற்ற அசம்பாவிதங்கள் ஏதுமின்றி ஜிஎஸ்டி எதிர்ப்புப் பேரணி சுமுகமாக நடந்து முடிந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருள்சேவை வரி ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் நஜிப் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கைகளுடன் நடத்தப்பட்ட நேற்றைய பேரணியில் துன் மகாதீர் முகமட்டும் கலந்து கொண்டு உரையாற்றினார்.