கோலாலம்பூர்: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மக்களின் நலன்களைப் பாதிக்காது என்பதை உறுதிப்படுத்த விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின்னரே அரசாங்கம் அதனை மீண்டும் செயல்படுத்தும்.
ஜிஎஸ்டி, விற்பனை மற்றும் சேவை வரி (எஸ்எஸ்டி) உடன் ஒப்பிடும்போது இது ஒரு விரிவான வரிவிதிப்பு முறை என்று ஒப்புக் கொள்ளப்பட்டாலும், ஆனால், இதற்கு முன்னர் நடந்தவற்றிலிருந்து அரசாங்கம் பல படிப்பினைகளை எடுத்துக் கொண்டுள்ளதாக துணை நிதியமைச்சர் டத்தோ அப்துல் ரகிம் பக்கார் கூறினார்.
“உண்மையில், ஜிஎஸ்டி ஒரு விரிவான வரிவிதிப்பு முறையாகும், ஆனால் அதே நேரத்தில் இது செயல்படுத்துவதில் பலவீனங்களையும் கொண்டுள்ளது, எனவே அரசாங்கம் இன்னும் விரிவான ஆய்வை மேற்கொள்ளும்,” என்று அவர் கூறினார்.
இன்று மேலவையில் வரவு செலவுத் திட்டம் தொடர்பான இறுதி விவாதத்தை முடிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.
இந்த பலவீனங்கள் அனைத்தையும் சமாளிக்க முடிந்தால், ஜிஎஸ்டி மீண்டும் செயல்படுத்தப்பட முடியும் என்று அவர் கூறுனார். மேலும் பல்வேறு தரப்புகளின் ஆதரவைப் பெறும், இதனால் அரசாங்கத்தின் வருவாயும் அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.