கோலாலம்பூர்: சுங்கை புலோவில் சந்தேகத்திற்கிடமான நான்கு கொள்ளையர்களை காவல் துறையினர் சுட்டுக் கொன்ற பல நாட்களுக்குப் பிறகு, “டத்தோ” எனக் கூறிக்கொண்ட ஒரு நபர், இந்த சம்பவம் தொடர்பாக குழு போராட்டத்தை நடத்துவதாக காவல் துறைக்கு தகவல் கொடுத்திருந்தார்.
சிலாங்கூர் காவல் துறைத் தலைவர் அர்ஜுனைதி முகமட் தனது திட்டத்தை தெரிவிக்க அந்த நபர் சுங்கை புலோ மாவட்ட காவல் துறை தலைமையகத்திற்கு அழைத்ததை உறுதிப்படுத்தினார்.
“அவர் சுங்கை புலோ மாவட்ட காவல் துறை தலைமையகத்தை தொடர்பு கொண்டு எதிர்ப்பு பற்றி தனது திட்டத்தை கூறினார். அவர்கள் எப்போது, எங்கு போராட்டத்தை நடத்தப் போகிறார்கள் என்பதைக் கண்டறிய நாங்கள் இந்த விஷயத்தை விசாரித்து வருகிறோம்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
டிசம்பர் 25- ஆம் தேதி, ரவாங்கில் ஒரு வீட்டுக் கொள்ளை பற்றிய தகவல்களைப் பெற்ற ஒரு காவல் துறைக் குழு, சந்தேகத்திற்கிடமான பெரோடுவா ஆக்சியா கார், சுங்கை புலோவில் நான்கு பேரை ஏற்றிச் செல்வதைக் கண்டது.
காரை நிறுத்தக் கோரிய காவல் துறை உத்தரவை மறுத்து, கார் ஜாலான் கோலா சிலாங்கூரை நோக்கி வேகமாகச் சென்றது. அவர்கள் ஒரு மோட்டர் சைக்கிளை மோதினர். அதில் ஒரு பெண் காயமடைந்தார்.
பாதிக்கப்பட்டவரை காப்பாற்ற காவல் துறையினர் சந்தேக நபரின் கார் மீது பல முறை துப்பாக்கியால் சுட்டதாக அர்ஜுனைடி கூறினார்.
சந்தேகநபர்கள் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
20 வயதில் இருந்த, நான்கு சந்தேகநபர்களும், இந்த ஆண்டு முழுவதும் சிலாங்கூரில் 50 க்கும் மேற்பட்ட கொள்ளைகளில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.