மாஸ்கோ, பிப். 16-ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இன்று இரவு அது பூமியைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று ரஷ்யாவின் வான்வெளியில் உரால் மலைப்பகுதிக்கு மேல் தோன்றிய எரி நட்சத்திரம் ஒன்று தீப்பிழம்புகளை கக்கியபடி செல்யபின்ஸ்க் பகுதியில் விழுந்தது. அப்போது பயங்கர குண்டுவெடிப்பு போன்று சத்தம் கேட்டுள்ளது.
இதனால் அப்பகுதியைச் சுற்றியுள்ள 6 நகரங்கள் பாதிக்கப்பட்டதாகவும், 400-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
6000 சதுர அடி பரப்பளவில் உள்ள துத்தநாக தொழிற்சாலையின் கூரை முற்றிலும் சேதமடைந்தது. எரிநட்சத்திரம் விழுந்த அதிர்வால் அருகில் இருந்த வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது.
விண்கற்களின் துண்டுகள் செல்யபின்ஸ்க் பகுதியில் விழுந்ததை அவசரகால அமைச்சகம் உறுதி செய்துள்ளது. கண்ணாடி உடைந்ததால் காயமடைந்த 102 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக உள்துறை செய்தி தொடர்பாளர் வாடிம் கோலஸ்னிக்கோவ் தெரிவித்தார்.