சென்னை, பிப்.16- கர்நாடகத்துக்கு ஆதரவாக காங்கிரஸ், பாஜக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு அக்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், “காவிரியிலிருந்து தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிட வேண்டும் என தமிழக காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இது குறித்து பிரதமரை சந்தித்து முறையிட்டுள்ளோம். ஆனால், அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்து ஒருமித்த குரலில் தீர்க்க வேண்டிய பிரச்னையை முதல்வர் ஜெயலலிதா அரசியலாக்கி வருகிறார்” என்று கூறினார்.
ஒற்றுமையாகச் செயல்பட்டால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும் வாய்ப்பு உண்டு. ஆனால், மத்தியில் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு அதிமுகவுக்கு எப்போதும் வராது என்றார்.
தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்: கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடந்தாலும் தமிழகத்துக்கு எதிரான கர்நாடக அரசின் நடவடிக்கைகளை தமிழக பாஜக கண்டித்தே வந்துள்ளது.
ஆனாலும், கர்நாடகத்துக்கு ஆதரவாக பாஜக செயல்படுவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பது வருந்தத்தக்கது. எதிர்காலத்தில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு பாஜகவுக்கு உள்ளது என்றார்.