கோலாலம்பூர், பிப்.16- 13வது பொது தேர்தலுக்கு சீன வாக்காளர்கள் பக்காத்தான் ராக்யாட் பக்கம் சாய்வதாகத் தோன்றினாலும் அந்த எண்ணத்தை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நிராகரித்துள்ளார்.
சில சீன தீவிரவாதிகளே அரசாங்க மாற்றத்தை ஆதரிக்கின்றனர் என அவர் இன்று சைனா பிரஸ் நாளேட்டில் வெளியான பேட்டியில் அவர் தெளிவாகச் சொன்னார்.
தொடர்ந்து, மலேசியாவின் வளர்ச்சிக்கு தேசிய முன்னணி அரசாங்கம் பங்காற்றியுள்ளதை பல சீனர்கள் பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“நான் கோலாலம்பூர் பவிலியனில் காப்பி அருந்திக் கொண்டிருந்த போது சீனர்கள் என்னை அணுகினர். அவர்கள் என்னிடம் ‘நன்றி’ எனச் சொன்னது எனக்கு வியப்பை அளித்தது.”
“ஏன் என நான் கேட்ட போது அவர்கள் இந்த நாட்டின் தேசிய முன்னணி அரசாங்கம் ஆற்றியுள்ள பங்கை மிகவும் பாராட்டுவதாக கூறினர்.”
“எல்லா சீனர்களும் அரசாங்க மாற்றத்தை விரும்பவில்லை என்பதை அது நிரூபிக்கிறது,” என அவர் சொன்னதாக அந்த ஏட்டில் விவரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சார காலம் பற்றிய கேள்விக்குப் பதில் அளித்த மகாதீர், அது குறைவாக இருப்பது நல்லது என்றார். வரும் தேர்தலுக்கு பத்து நாட்கள் போதுமானது என்றார் அவர்.
எடுத்துக்காட்டுக்கு 1969ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு ஆறு வார பிரச்சார காலம் வழங்கப்பட்ட போது மக்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டனர் என அவர் சொன்னார்.
அதனால் உணர்ச்சிகரமான எண்ணங்கள் இனக் கலவரங்களாக மாறின என்றும் மகாதீர் தெரிவித்தார்.