தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனிநீதிமன்றதில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இறுதி வாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அரசு சிறப்பு வழக்கரிஞர் பவானிசிங் வாதிட்டு வருகிறார். கடந்த வாரம் விசாரணை நடைபெற்றபோது இந்த வழக்கு 5–ஆம் தேதிக்கு (நேற்றைக்கு) தள்ளிவைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் பெங்களூர் தனிநீதிமன்றதில் நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா முன்னிலையில் சொத்து குவிப்பு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா சார்பில் ஆஜரான அவரது வழக்கரிஞர் குமார் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
அதில், மெடோ அக்ரோ பார்ம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் சார்பில் சொத்துகளை விடுவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது விசாரணை நடத்தி முடிக்கும் வரை சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டி வழக்கரிஞர் குமார் தனது தரப்பு வாதத்தை எடுத்து வைத்தார். இதற்கு அரசு சிறப்பு வழக்கரிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த மனு மீதான தீர்ப்பை 7–ஆம் தேதி (அதாவது நாளை) வழங்குவதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து அரசு சிறப்பு வழக்கரிஞர் பவானிசிங் தனது இறுதி வாதத்தை தொடர்ந்தார். இன்றும் (செவ்வாய்கிழமை) இந்த இறுதி வாதம் நடைபெறுகிறது