கலிபோர்னியா, மே 6 – ஆப்பிள் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட காப்புரிமைகளை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக தென்கொரியாவின் சம்சுங் நிறுவனம் 119.6 மில்லியன் அமெரிக்க டாலர் நஷ்ட ஈடாக ஆப்பிள் நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆனால், ஆப்பிள் நிறுவனம் இந்த வழக்கில் கேட்டிருந்த 2.2 பில்லியன் அமெரிக்க டாலரை விட இது மிகவும் குறைவான தொகையாகும். கடந்த சில வாரங்களாக நடைபெற்ற இந்த வழக்கில் பல வாதப் பிரதிவாதங்களுக்குப் பின்னர் இந்த வழக்கின் ஜூரி மன்றம் 119,625,000 நஷ்ட ஈட்டுத் தொகையை 3 காப்புரிமைகளை மீறியதற்காக சம்சுங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும் என தீர்ப்பளித்தது.
அதேவேளையில், சம்சுங் நிறுவனத்தின் காப்புரிமை ஒன்றை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக ஆப்பிள் நிறுவனம் 158,400 அமெரிக்க டாலர் நஷ்ட ஈட்டுத் தொகையை சம்சுங் நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என்றும் இதே நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. தங்களின் காப்புரிமைகள் அனுமதியின்றி மீறப்படுவதாக சம்சுங் நிறுவனமும் ஆப்பிள் நிறுவனமும் கடும் போராட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றங்களிலும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தத் தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த வழக்கின் தீர்ப்பு அமைகின்றது.