கோலாலம்பூர், ஏப்ரல் 6 – ஆப்பிளின் அடுத்த ஐபோன்களுக்கான ‘ஏ9 ப்ராசஸர்’ (A9 Processor)-ஐ சாம்சுங் தயாரிக்க இருப்பதாக ஆருடங்கள் கூறப்படுகின்றன.
ஐபோன் 6-ன் ஏ8 ப்ராசஸரை தைவான் நாட்டைச் சேர்ந்த ‘டிஎஸ்எம்சி’ (TSMC) நிறுவனம் தயாரித்தது. ஐபோன் 6-ம் பயனர்கள் மத்தியில் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில், ஆப்பிள் தனது அடுத்த ஐபோன்களுக்கான ப்ராசஸர் தயாரிப்பினை சாம்சுங் நிறுவனத்திற்கு கொடுத்திருப்பதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
ஆப்பிளின் இந்த புதிய ஒப்பந்தத்திற்கான ஆருடங்கள் கடந்த டிசம்பர் மாதம் முதல் கூறப்பட்டு வந்த நிலையில், நம்பத்தகுந்த தகவல்கள் தற்போது வெளிவரத் தொடங்கி உள்ளன.
ஆப்பிள் தைவான் நிறுவனத்தை தவிர்த்து சாம்சுங்குடன் ஒப்பந்தம் மேற்கொள்ள பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் மிக முக்கியமான ஒன்று ஏ9 ப்ராசஸருக்கான ’14 நானோ ப்ராசஸ்‘ (14 Nano Process) தொழில்நுட்பம். தைவான் நிறுவனத்தை விட சாம்சுங் இந்த தொழில்நுட்பத்தில் மேம்பட்டு இருப்பதாக ஆப்பிள் கருதுகின்றது.
சாம்சுங் நிறுவனமும், அதனை மெய்பிக்கும் வகையில் தென் கொரியாவிற்கு வெளியே ப்ராசஸர் தயாரிப்பிற்கான தொழிற்சாலை ஒன்றை சுமார் 15 பில்லியன் டாலர்கள் செலவில் அமைத்துள்ளது. ஐபோன்களுக்கான ஏ9 ப்ராசஸர் குறிப்பிட்ட அந்த தொழிற்சாலையில் தான் தயாராக இருப்பதாக கூறப்படுகின்றது.
இந்த புதிய ஒப்பந்தத்தால், சாம்சுங் பெரிய அளவில் இலாபம் ஈட்ட இருப்பதாக தொழில்நுட்ப வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. கடந்த முறை ஆப்பிள் தனது ஐபோன் 6-ற்கான ப்ராசஸர் தயாரிப்பிற்கு 25.8 பில்லியன் டாலர்கள் வரை செலவு செய்துள்ளது. இம்முறை, புதிய தொழில்நுட்பங்களுடன் ஏ9 ப்ராசஸர் தயாரிக்கப்பட இருப்பதால், கடந்த முறையை விட இம்முறை தயாரிப்பு செலவு பன்மடங்கு அதிகமாகும் என்பது நிச்சயம்.